கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தமிழகத்தில் இரண்டாம் முறையாக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துரை செயலர் தெரிவித்தார். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட கடந்த சில நாள்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனிடையே சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. அதோடு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.


தமிழகத்தில் வரும் 24ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று எதிர்பார்த்த அளவுக்கு குறைய வாய்ப்பில்லை என்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் அத்தியாவசிய விஷயங்களை தவிர மற்ற அனைத்துக்கும் தடை விதித்து கடுமையான ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.




கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணை பணம் அனைவருக்கும் இந்த வாரத்துக்குள் கொடுத்து முடிக்கப்பட்டால் ஊரடங்கை நீட்டிக்க இயலும் என்பதால் அதனை விரைவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தலைமை செயலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது “ஊரடங்கு முடியும் நாளுக்கு முன் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு மற்றும் மருத்துவ குழுவை முதல்வர் முக ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவுகம் அந்த சந்திப்பு அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.


 


மேலும் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வருவதால் போதுமான ஆக்சிஜன் இல்லாமலும் படுக்கை வசதிகள் இல்லாமலும் உள்ளனர். எனவே அதனை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை அரசு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக பெரிய அளவிலான இடங்களை அரசே கட்டுப்பாட்டில் எடுத்து அவற்றை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற முயற்சி நடப்பதாகவும் இதனை நடைமுறைப்படுத்த ஊரடங்கு அமலாகலாம் எனவும் அதிகாரிகள் கூறினர். அதே நேரத்தில் இன்னும் கடுமையான விதிகளோடு வரும் ஊரடங்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர்.