செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மாற்றுத்திறனாளிகளின் 4-வது மாநில மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

 



நான் செல்லும் இடங்களில் எல்லாம் மனமகிழ்ச்சியோடு, சிரித்த முகத்தோடு அந்த மாற்றுத்திறனாளித் தோழர்களைப் நான் பார்த்ததுண்டு. அவர்களைப் பார்த்ததும் என்னுடைய காரை நிறுத்தச் சொல்லி, காரிலிருந்து இறங்கி, அவர்களுக்கு அருகிலே சென்று அவர்களைப் போய் பார்த்து கை கொடுப்பது என்னுடைய வழக்கமாகவே நான் வைத்திருக்கிறேன். உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று நான் அவர்களிடம் சொல்வேன். நான் சொல்லவில்லை என்றாலும், நமக்காக இருப்பவர் இந்த ஸ்டாலின் என்று அந்தத் தோழர்களுக்குத் நன்றாகப் புரியும். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவதுதான் மிகப் பெரிய சாதனை.வயது முதிர்வின் காரணமாக, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தினார்கள். அவரது உடல் எடையைத் தாங்கும் சக்தி அவருடைய கால்களுக்கு இல்லாத நிலையில் அவர் அதனை பயன்படுத்தினார். காலமெல்லாம் இதனைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் எவ்வளவு சிரமத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை அவர் எண்ணிப் பார்த்துதான் இந்தத் துறையைக் கண்ணும் கருத்துமாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கவனித்தார்கள். எங்களையும் அப்படி கவனிக்கச் சொன்னார்.

 



நான் தொடக்கத்தில் சொன்னது போல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சியாக இருந்தபோதும் சரி, நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கக்கூடியவர்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகிச் செல்வபவர்கள் அல்ல நாங்கள். உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்துவதற்காகத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இங்கே கூட நம்முடைய மதிப்பிற்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் இருக்கிறார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அவ்வப்போது எங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி வருபவர்தான் அவர்.  ஆகவே, சொல்லக்கூடிய அந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை அறிந்து, புரிந்து அதனை எந்த அளவுக்கு நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பது அவருக்கும் தெரியும், உங்களுக்கும் புரியும். இப்படி அனைத்து மக்களுடைய அரசாக ஒரு நல்லாட்சியை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்தி வருகிறது.

 



திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏதோ நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் ஒரு புதிதாக ஒன்று கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான்கு முதலமைச்சர்கள் அல்ல - யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ,  அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னாரே அந்த ஆட்சிதான் நடக்கிறது. இது ஒரு கட்சியின் ஆட்சியாக நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. இனத்தினுடைய ஆட்சி என்று அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். 



 

 

ஆனால் இன்றைக்கு சொந்தப் புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லாமல், கடந்த கால அ.தி.மு.க அரசு இருந்ததே அதைப் போன்ற ஆட்சி அல்ல இந்த ஆட்சி. இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம்! இத்தகைய திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் நன்மை செய்யும் ஆட்சியாக அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக அனைவரின் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது. இன்னும் பல கோரிக்கைகள் இருக்கிறது, நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை, அதை நான் மறந்துவிடவும் மாட்டேன். அவைகளை எல்லாம், எந்தெந்த நிலையில், நிதி ஆதாரங்களைப் பொறுத்து, சில சட்ட விதிகளை அடிப்படையாக வைத்து அவைகளை எல்லாம் உறுதியாக நிறைவேற்றப்படும். அந்த உறுதியை நான் தர விரும்புகிறேன். இன்னும் சொல்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள்" என பேசினார்.