ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையையும், கல்வி வளர்ச்சியையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவுடன் மிகவும் நல்லுறவில் இருந்து வரும் நாடு தென்கொரியா.


தென்கொரியா செல்லும் தமிழக மாணவர்கள்:


தென்கொரிய அரசும் அவர்களது நாட்டில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், வெளிநாட்டு மாணவர்கள் தென்கொரியாவின் கல்வி முறையை தெரிந்து கொள்ளும் விதமாக கல்விச்சுற்றுலா உள்ளிட்ட பலவற்றை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


இந்த வகையில், தென்கொரிய அரசு உலகளாவிய மாணவர்கள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களும் தேர்வாகியுள்ளனர். இதன்படி, தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் உள்ள 35 மாணவர்களை தென்கொரியாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மாணவர்களும் தென்கொரியாவிற்கு சுற்றுலா செல்ல உள்ளனர்.


தென்கொரிய அரசின் திட்டம்:


தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரும், தமிழ்நாடு டிராவல் பெடரேஷன் சங்கத் தலைவருமான விகேடி பாலனின் மதுரா டிராவல்சுடன் இணைந்து தென்கொரிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கான விழா சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்கொரிய நாட்டின் கவுன்சில் ஜெனரல் சாங்நியூம் கிம், சார்க் நாடுகளின் இந்திய மண்டல இயக்குனர் மியாங் கில் யுன், விகேடி பாலன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.


கொரிய அரசாங்கம் இந்தியர்கள் அவர்களது நாட்டை பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் நாட்டு சுற்றுலாத்துறையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பிலும் இதேபோன்று மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அந்தந்த நாடுகளில் உள்ள கல்வி முறைகளை அறிந்து கொள்வதன் மூலம் பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Thanjavur: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... கல்வி கற்றுத்தந்த ஆசான்களை பார்க்க ஓடிவந்த பழைய மாணவர்கள்


மேலும் படிக்க: Secondary Teachers: பேச்சுவார்த்தை தோல்வி: இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்- திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதம்