விநாயகர் சதுர்த்தியொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.


அவதூறு பேச்சு:


இந்த நிலையில் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யார், ஆரணி, போளூர், உள்ளிட பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைப்பெற்றது. அதில் இந்து விநாயகர் ஊர்வலம் நடைப்பெறுவதற்கு முன்பு இந்து முன்னணியினர் சில மணி நேரம் பேசிவிட்டு ஊர்வலம் சென்றனர்.


ஆரணி அண்ணா சிலை அருகே கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதன் பின்னர் பேசிய கோட்ட தலைவர் மகேஷ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களை  பற்றி அவதூறாகவும் மத உணவர்களை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 




 


கைது:


இதனையொடுத்து இச்சம்பவம் ஆரணி திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆரணி திமுக நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி நகர காவல் நிலையத்தில் இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ்  மீது  கொடுத்த புகாரில்  மத உணர்வை தூண்டுதல், பொது அமைதிக்கு கெடு விளைவித்தல், தனி நபர்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆரணி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


மேலும் இந்த புகாரின் அடிப்படையில் ஆரணி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியின் தலைமையிலான காவல்துறையினர் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷை  அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரை சந்தவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை மேற்கொள்ளப்பட்டது.




 


4 பிரிவுகளில் வழக்கு:


இதனையொடுத்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ்  கைது செய்த தகவல் வெளியானதால் மாவட்ட செயலாளர் தாமோதரன்  தலைமை 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர்  சந்தவாசல் காவல் நிலையத்தில் முற்றுகை யிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி இந்து முன்னணி கோட்ட தலைவரை விடுதலை செய்யக்கோரி வலியுறுத்தினர். அவர்களிடம் காவல்துறையினர் பேசி சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.


பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய கோட்ட தலைவர் மகேஷ் என்பவர் மீது போலீசார் V/s  153(1)a, 298,504, 505,(3) உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் வேலூர் மத்திய சிறைக்கு காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி செல்லும் போது இந்து முன்னனியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் இந்து முன்னனியினரை அப்புறபடுத்தி போலீஸ் வாகனம் பாதுகாப்பாக அனுப்பபட்டன. ஆரணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசிய இந்து முன்னனி கோட்ட தலைவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.