தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றபின் இரண்டாம் நாளான நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிரம்ம குமாரிகள் தியான பயிற்சி நிலைய மையத்தின் அருகே நடைபெற்றது.
இந்நிலையில் இந்த பொன் விழா ஆண்டு விழாவின் நிறைவு விழாவினை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பேசிய பிரம்ம குமாரிகள், இந்தியா முழுவதும் 250 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு ஆன்மீகத்தை அளித்து மன அமைதி மகிழ்ச்சி அனைத்தையும் மக்களுக்கு வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றி பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,
“பிரம்ம குமாரிகள் இயக்கம் அன்பை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் வரவேற்கிறேன். அன்பு, மகிழ்ச்சி என்ற சாவி நம் கையில் தான் உள்ளது. அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோமோ அதன் மூலமே நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மூத்த குடிமக்களின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதால், அவர்கள் நினைத்தால் மீண்டும் அளித்த சொத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அளித்த தீர்ப்பை கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். பூஜை பொருட்களான தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை இவை அனைத்தும் நாம் திரும்ப பெற்றுக் கொள்ளும் நிலையில் கற்பூரம் மட்டுமே தன்னை முழு அர்ப்பணிப்புடன் இறைவனுக்கு அளிப்பதை போல் பிரம்ம குமாரிகள் இயக்கம் கற்பூரம் போல் தன்னை முழு அர்ப்பணிப்போடு பொதுமக்களுக்கு அன்பை வழங்குகிறது” என பெருமிதத்தோடு தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்