பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஸ் சமீபத்தில் தான் மீண்டும் மாநில பணிக்குத் திரும்பினார். பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளராக பணியில் இருந்து தமிழகம் திருப்பி அனுப்பப்பட்ட அமுதாவிற்கு, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது அமுதா ஐஏஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் செல்வதற்கு தற்போது வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணிந்து அமுதா எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக பொதுமக்களிடையே பாராட்டுக்களைப் பெற்றார். சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு இவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அரசின் உத்தரவுப்படி , உடனடியாக களத்தில் இறங்கிய அமுதா ஐஏஎஸ் சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தகைக்குத் தன்னிச்சையாக விடுவது சட்டவிரோதம் என்றும் குறிப்பிட்ட பணத்தை அரசுக்குக் கட்டி விட்டு மீதி பணத்தை முறைகேட்டில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், "அனைத்து ஊராட்சி செயலர்கள், பொறியாளர்களுக்கு வணக்கம்.. தற்போது பல ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை மீன் குத்தகைக்கு ஊருக்குள் பேசி ஏலம் விடப்படும் நடைமுறை இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். ஏரி, குளங்களை ஏலம் விட வேண்டும் என்றால் முதலில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இதற்குரிய அலுவலர்கள் முன்னிலையில் தான் ஏலம் நடைபெற வேண்டும். அந்த ஏல தொகையும் அரசு அலுவலகத்தில் தான் கட்ட வேண்டும். ஏரிகளை ஏலம் விடுவது தொடர்பாக இதுவரை அலுவலகங்களில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.. இதனால் இதற்கு முன் ஏரி எதாவது ஏலம் விடப்பட்டிருந்தால் அது செல்லாது. அப்படி நடந்தால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது துணிச்சலாக அமுதா ஐஏஎஸ் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்