தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் அவதியடைந்தனர். மழைவெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். எப்போது மழை நிற்கும் என்பதே அவர்களின் மனக்கவலையாக உள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் மழைவெள்ளம் ஏற்படுமோ என சென்னை மக்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதுமாக மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 3 நாட்களாக மின் இணைப்பும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். 



அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத சூழ்நிலையில் சிலர் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் வெளியில் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  டிராக்டர் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிநீர் விநியோகம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகிறது.



பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் கூட சென்று சேரவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதாவது உதவிகள் என்பது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மட்டுமே செல்வதாகவும் கடைசியில் இருக்கும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் குடிநீர் உட்பட எந்த பொருட்களும் அரசு சார்பில் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தொடர்ந்து 4 நாட்களாக பெரும்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தண்ணீர் வெளியேறுவதற்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



 

இதேபோல சென்னை அடுத்துள்ள செம்மஞ்சேரி பகுதியிலும் பொது மக்களுக்கு அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படு   வருகின்றனர். செம்மஞ்சேரி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களின் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 6 ,7 8, 9 ,10 ஆகிய தெருக்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கூட கிடைக்காமல் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதேபோல தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
















ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண