சென்னையில், புதிதாக வாகனம் சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல், நேற்று வரை 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி, புதிய விதிமுறைகள் மற்றும் அபராதங்களை விதித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்தது.


அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதை தொடர்ந்து, புதிய அபராத தொகையை வசூலிப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இச்சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.




ரூ.1.88 கோடி அபராதம்


இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, 30 ஆயிரத்து 669 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 



  • ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக, 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 42.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக, 4,728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக, ஆயிரத்து 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.67.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


புதிய விதிமுறைகள்:


அதன்படி, முதல் முறை விதிமீறலில் ஈடுபடுவோரிடம் ஒரு அபராதமும், அதே விதிமீறலில் 2வது முறை ஈடுபடுவோரிடம் கூடுதல் அபராதமும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனை தொடர்ந்து புதிய போக்குவரத்து சட்டப்படி, உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் தற்போது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.


இதே விதிமீறலை செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் இனி 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.


மேலும் வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதுடன், இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் முன்பு விதிக்கப்பட்ட ரூ. 10,000 அபராதம் அப்படியே தொடர்கிறது. 




மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், “வீலிங்” எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் 500 ரூபாயாக இருந்த அபராதம் 5000 ரூபாயாகவும், அதே விதிமீறலில் 2வது முறை பிடிபட்டால் 10,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்.  


கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். வாகனங்களுக்கு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும்.  பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் ரூ.2,500 அபராதம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.