தமிழ்நாட்டில், அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் மழை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி,விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் தீடிரென மழை பெய்தது. அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
வானிலை நிலவரம்:
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அநேக இடங்களிலும், அதற்கு அடுத்து இரண்டு நாள்களுக்கு ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.
நவம்பர் 8, 9ஆம் தேதிகளில் தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 50-55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.