பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, பல்மருத்துவமனையில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் தெரிவித்ததாவது, தண்ணீர் குடித்தாலோ, தேநீர் அருந்தினாலோ எனது கடவாய் மேற்பல் கடந்த இரு தினங்களாக கூச்சத்துடன் கூடிய வலி சற்று அதிகமாக இருந்ததால் இன்று (11.06.2024) சிகிச்சைக்காக சென்னை, பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.
ஏற்கனவே அதே பல் வலிக்காக கடந்த ஏப்ரல்-17 மற்றும் ஜூன்-6ம் தேதிகளில் சென்று சிகிச்சை எடுத்திருந்ததால் இன்றைய தினம் அதன் ரிப்போர்ட் பார்த்து பல்லையும் பரிசோதித்த மருத்துவர் மற்றொரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள், அதை பார்த்துவிட்டு முடிவு செய்வோம் என்றார்.
நானும் சுமார் 1.30மணி நேர காத்திருப்பிற்கு பின்னர் அதே மருத்துவமனையில் எடுத்து வந்த எக்ஸ்ரே படத்தை பார்த்த மருத்துவர் பல் சொத்தை ரொம்ப ஆளமாக சென்றிருப்பதால் வேர் சிகிச்சை தான் செய்ய வேண்டும் எனக் கூறி அதற்கான பிரிவு மருத்துவரை சென்று பார்க்குமாறு பரிந்துரை சீட்டு எழுதி கொடுத்தார். அந்த மருத்துவர் பரிந்துரை செய்த சீட்டை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவு மருத்துவரை சென்று சந்தித்து விபரத்தை கூறி, மருத்துவர் பரிந்துரைத்த சீட்டை காட்டிய போது அவரும் தனது பங்கிற்கு பல்லினை சோதனை செய்து விட்டு வேர் சிகிச்சை தான் செய்ய வேண்டும். அதற்கு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி காலை 7.30மணிக்கு வாருங்கள் என அவர் கூறியது தூக்கி வாரிப் போட்டது.
ஏனெனில் சாதாரண தண்ணீர் குடித்தால் கூட பல் கூச்சமும், வலியும் அதிகமாக இருக்கின்ற சூழலில் பல் வேர் சிகிச்சை செய்ய கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து வரச் சொன்னால் அதுவரை வலியை எப்படி தாங்குவது, கூச்சத்தை எப்படி பொறுத்துக் கொள்வது, தண்ணீர் எவ்வாறு அருந்துவது..? என தெரியாததால் வலிக்கும் போது என்ன செய்வது..? என கேட்டேன். அப்போது வலிக்காக மாத்திரை எழுதி தருவதாக கூறிய மருத்துவர், எழுதியும் தந்தார். மருத்துவர் எழுதித் தந்த அந்த சீட்டினை கொண்டு போய் மருந்தாளுனரிடம் கொடுத்தால் "டிக்ளோ பெனாக் சோடியம் 50மி.கி" மாத்திரை வெறும் நான்கு மட்டும் தருகிறார். இந்த நான்கு மாத்திரை இரண்டு மாதம் எப்படி வலியை தாங்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.
தனியார் மருத்துவமனைகள் குறிப்பாக பல் மருத்துவமனைகள் பல் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை பிடுங்குவதால் தான் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி, தேடிச் செல்கின்றனர். ஆனால் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களோ வேர் சிகிச்சை போன்ற சிகிச்சை பெற இரண்டு மாதம், மூன்று மாதம் என அலைகழிப்பது மருத்துவர்கள் பற்றாக்குறையினாலா..? இல்லை ஒருவேளை தனியார் பல் மருத்துவமனை நடத்தும் மருத்துவர்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்களா..? என தெரியவில்லை. கோல்டன் ஹவர் என்பது விபத்து கால சிகிச்சைகளுக்கு மட்டுமல்ல என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உணர்ந்து செயலாற்ற அரசு உத்தரவிட்டால் மட்டுமே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெற முடியும்.
அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக நான் அங்கு சிகிச்சைக்காக சென்று வந்த வரை முன்பு பார்த்ததில் பாதியளவு கூட மக்கள் கூட்டம் இல்லை என்பதை வைத்து பார்க்கும் போது இங்கே வந்து அலைவதை விட தனியார் மருத்துவமனைகளே மேல் என்கிற முடிவிற்கு மக்களை மருத்துவர்கள் தள்ளி விட்டு விட்டது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.