சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை சர்வதேச விமான நிலையம்


சென்னை விமான நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவது அதிகரித்து வந்த நிலையில், சமீப காலமாக போதை பொருட்கள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் சென்னை விமான நிலையம் வழியாகவும், சென்னைக்கும் கடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியில் ஏற்படுத்தி வருகிறது. அவப்பொழுது பிடிபட்டாலும் பிடிப்படாமல் எவ்வளவு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என்ற கேள்வி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தாய்லாந்து வழியாக சென்னைக்கு 3.5 கிலோ எடையுள்ள, கொக்கை என்ற போதை பொருளை கடத்தி வந்த இந்தோனேசியா இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 3.5 கிலோ எடையுள்ள இந்த போதை பொருளின் மதிப்பு சுமார் 35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது .


அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்


வெளிநாடுகளில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை தொடர்ந்து சென்னை விமான நிலையம் உஷார் படுத்தப்பட்டது. இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகள் சோதனையை தீவிர படுத்தினர். இது தொடர்பாக தனி படைகள் அமைத்து நேற்று அதிகாலை முதலில், சர்வதேச பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு கீழ் கொண்டுவரப்பட்டனர். வழக்கத்தை விட சென்னை விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டது.


உஷாரான விமான நிலையம்


அப்பொழுது தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்பொழுது தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த இந்தோனேசியாவை சேர்ந்த 26 வயதான இளைஞர், டிரான்சிட் பயணியாக லாவோஸ் நாட்டில் இருந்து தாய்லாந்து வழியாக சென்னைக்கு வந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட பயணியின் நடவடிக்கை மீது விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். விசாரணை மேற்கொண்ட பொழுது தான் சுற்றுலா செல்ல வந்ததாக கூறியதால், சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது. அவரிடம் விசாரணை செய்த பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். 


ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்



இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரை விமான நிலைய அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று தீவிர சோதனை செய்தனர் அப்பொழுது அவர் கொண்டு வந்த உடைமைகளை ஆய்வு செய்த பொழுது, அவர் வைத்திருந்த சூட்கேஸில் மூன்று ரகசிய அறைகளை வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூன்று ரகசிய அறைகளில் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கொக்கின் போதை பொருள் என்பதை உறுதி செய்தனர். இது சுமார் 3.5 கிலோ இருப்பதும் இதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூபாய் 35 கோடி எனவும் தெரியவந்தது. இதனை அடுத்து போதை பொருட்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் படத்தில் ஈடுபட்ட இந்தோனேசியா இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.