தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவகக் கப்பலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மிதக்கும் உணவகம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் 'போட் ஹவுஸ்' இயங்கி வருகிறது. இந்த போட் ஹவுஸில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ள மிதவை படகுகள், மோட்டார் படகுகள், விரைவு படகுகள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக இயங்கி வரும் இந்த படகு இல்லங்கள் மீதான ஈர்ப்பு சென்னை மக்களுக்கு குறைந்து விட்டதை அடுத்து அதனை மேலும் பெரிதாக்க முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளையும், சென்னை வாசிகளின் வீக்கெண்ட் விசிட்களையும் அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 5 கோடி ரூபாய் செலவில் 125 அடி நீளம், 25 அடி அகலம் கொண்ட இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பலை இந்த படகு இல்லம் அறிமுகப்படுத்த உள்ளது.
அமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சின் கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் மூலம் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த கப்பல் உணவகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 60 குதிரை ஆற்றல் திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவரான சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அ.ர.ராகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். இந்த உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட இடமாகவும், மேல் தளம் திறந்த வெளியாக சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு உணவருந்தும் வசதியுடனும் வர உள்ளது.
சிறப்பம்சங்கள்
- இந்த கப்பல் உணவகம், தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகமாக வர உள்ளது.
- இந்த ரெஸ்டாரண்ட் க்ரூஸ் கப்பல் இரண்டு அடுக்குகளுடன் கட்டப்படும்.
- இதன் அமைப்பு 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உணவகத்தின் தரை தளம் முழுவதும் ஏ/சி வசதியுடன் வரும்.
- முதல் தளம் திறந்த வெளியாக வடிவமைக்கப்பட உள்ளது.
- சமையலறை, சேமிப்பு அறை, கழிப்பறை, இயந்திர அறை ஆகியவை இதனுள்ளேயே கட்டப்பட உள்ளன.