சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்த மார்ச் 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை:
”மார்ச் 31ம் தேதி அன்று கால அவகாசம் முடிவதற்குள் நிலுவையில் உள்ள சொத்து மற்றும் தொழில் வரியை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூபாய் 1,390 கோடி சொத்து வரியாகவும், ரூபாய் 412 கோடி தொழில் வரியாகவும் சென்னை மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து வரி விவரம்:
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடமிருந்து சொத்து மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டு வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள், நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அபராதம் இல்லை:
சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த நிதியாண்டின் முதல் பாதிக்கான வரி ஏப்ரல் 15க்குள்ளும், இரண்டாம் பாதிக்கான வரி அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரி செலுத்தாதவர் மீது பெருநகர சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வசிக்கும் கட்டடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்தால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இதனிடையே, சொத்து வரியை சரியாக செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது ரூபாய் 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேநேரம், கால அவகாசம் முடிந்த பின் சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால், அபராதம் இன்றி சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்தது. ஆனாலும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
வரி செலுத்தாத 5 லட்சம் பேர்:
சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 8.3 லட்சம் பேரிடமிருந்து இதுவரை, 1400 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் 5 லட்சம் பேர் வரியை செலுத்தவில்லை. அவர்களிடமிருந்து மார்ச் 31ம் தேதிக்குள் வரியை வசூலிப்பதோடு, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வசூலில் சென்னை முதலிடம் பிடிக்க வேண்டும் எனும் நோக்கிலும் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, தற்போது நாள் ஒன்றிற்கு ஒரு வார்டில் 100 பில் எனும் இலக்குடன் வரி வசூலிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.