அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததாக, தவறான தகவல்கள் பரவி வருவதாக டிஜிபி விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலை: பரவி வரும் தகவல்
இவ்வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் , ஆபாச பட அடங்கிய லேப்டாப் கைப்பற்றியதாகவும் மற்றும் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு டிஜிபி தெரிவித்ததாவது, “ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக எஸ்.ஐ.டி குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக ஆதாரமற்ற தகவல் பரவி வருகிறது.
”தவறான தகவலை பரப்ப வேண்டாம்”
மேலும், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச வீடியோ அடங்கிய சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் ஆதாரமற்ற தகவல் பரவி வருகிறது.
எந்தவொரு அறிக்கையோ மற்றும் கருத்தோ , எந்தவொரு தனிநபருக்கும் மற்றும் ஊடகத்துறைக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவிக்கவில்லை. எஸ்.ஐ.டி விசாரணை குறித்தான தகவல்கள் பொது வெளியில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விசாரணையை பாதிக்கும் ; மேலும் தவறான தகவல்கள் சம்பந்தப்பட்டவருக்கு கடும் பின்விளைவை ஏற்படுத்தி, புலன் விசாரணையை நம்பகத்தன்மையை பாதிக்கும். எனவே ,யாரும் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:
கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவானது, இவ்வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
ஞானசேகரன் வீட்டில் சோதனை:
இந்நிலையில், இன்று ஞானசேகரன் வசிக்கும் கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் , இன்று காலையில் இருந்தே 10க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சுமார் 6 மணி நேரம் ஞானசேகரன் வீட்டில் பெட்டி பெட்டிகளாக ஆவணங்களை புலனாய்வு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு விசாரணை குறித்தான, தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.