தமிழ்நாட்டின்  மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, 'கல்வி வளர்ச்சி தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் கல்வி கற்கவும், தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்கியது நிச்சயம் காமராஜர் ஆட்சியில்தான் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.


காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்யாகிரகம் நடைபெற்ற போது காமராஜரும் கலந்து கொண்டார்.


இதற்காக சிறைக்கும் சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலளராக நியமிக்கப்பட்டார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை காங்., தலைவராக இருந்தார்.


இதனை தொடர்ந்து 1954ல், பதவியேற்ற இவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. 




காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.


இந்நிலையில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு முழுவதும் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மற்றும் அவரது திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


இந்த நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.