தமிழக சட்டமன்ற பேரவைக் கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 -வது சட்டப்பேரவையின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல், கடந்த 18ம் தேதியும் அதற்கு அடுத்த நாள் 19ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கலும் நடைபெற்றது. அதேபோல நேற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு,  ஒருமனதாக அந்த தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.





சட்டப்பேரவைத் தலைவர் என்பவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார். மேலும் அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும், இவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய அதிகாரம் மிக்க பதவி சபாநாயகர் பதவி என்பதால் பாரம்பரிய முறைப்படி அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சட்டமன்றத்திற்கு என அவை காவலர்கள் என தனி பொறுப்பும் உள்ளது . 


துபாஷ்


சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து , சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் , அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். துபாஷ் என்பவர் சபாநாயகர் வருவதை உறுதி செய்யும் நபராக கருதப்படுகிறார். இது முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த பதவி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



முதல் பெண் துபாஷ்


1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது 60 வயது எட்டியுள்ளது. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் துபாஷ் பொறுப்பிற்கு  நியமிக்கப்பட்டுள்ளது , அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




துபாஷ் என்ற பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படும். ஆண்கள் மட்டுமே அணிந்து இருந்த இந்த சீருடையை தற்போது அப்பெண்ணும் பயன்படுத்த தொடங்கி உள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும்கூட முதன் முறையாக அதுவும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பணியில் ராஜலட்சுமி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெண் துபாஷ் ராஜலட்சுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.