செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (65). இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகள் லோகேஸ்வரி (37), மகன் சரவணன் (35) ஆகியோர் உள்ளனர். இதில் உமாபதியின் மனைவி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் திருமணமான மகள் லோகேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகளும், சரவணனுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும் லோகேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதில், உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் ஒரு வீடும் ,காயரம்பேடு பகுதியில் ஒரு வீடும் உள்ளன.
அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை லோகேஸ்வரிக்கு பிறந்த மகன் பரமேஸ்வரனுக்கும்,உமாபதி எழுதி வைத்துவிட்டார். இதில் இரண்டு வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் உமாபதி புகார் அளித்து அது தொடர்பாக சரவணன் மற்றும் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் மீது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் உமாபதி தனது பைக்கில் காயரம்பேடு பகுதியில் இருந்து கன்னிவாக்கம் பகுதிக்கு வழக்கம்போல் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் கன்னிவாக்கம் அரசு பள்ளி அருகில் உமாபதியை சரமாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் சொத்து விஷயத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதேபோல சரவணனின் மனைவியான உமா மகேஸ்வரியிடம் உமாபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சொத்துக்காக கொலை நடந்ததா அல்லது பாலியல் சீண்டல் காரணமாக கொலை நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.பேராசை பிடித்த மகன் சொத்துக்காக தன் தந்தையை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.