சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம். இவர் அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார். விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருங்குடி மண்டலத்தில் உள்ள 188 ஆவது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் அல்லது இவரது மனைவி அந்த வார்டில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள இவரது வீட்டிற்கு இரவு 9 மணியளவில் சிலர் மாலையுடன் வந்துள்ளனர். அவர்கள் செல்வத்தை வாழ்த்த வந்ததாக அனைவரும் கருதினர்.



அவர்களைச் செல்வம் வரவேற்கச் சென்றபோது, திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வெளியே எடுத்து செல்வத்தை சரமாரியா வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வம் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது படுகொலை தொழில் போட்டியால் நடத்தப்பட்டதா அல்லது அரசியல் காரணங்களாக நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாநகர 38வது வார்டு திமுக செயலாளராக உள்ள பொன்னு தாஸ் என்ற அபே மணி இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், இப்படி அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பெருங்குடி மண்டலத்தில், இவரது மனைவி சமீனாவுக்கு, சீட் கொடுக்க தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மண்டலத்தில், இதர வார்டுகளில் சீட் வழங்குவதில், செல்வம் தலையீடு இருந்துள்ளது. இதன் காரணமாக முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் ரியல்எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர