கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரை கடந்து கொளுத்தி எடுத்தது. இந்த வெயில் காரணமாக இரவு நேரங்களில் கூட வெக்கையானது தூங்கவிடாமல் பாடாய்படுத்தியது. இத்தகைய தாக்கத்தால் நெட்டிசன்கள் ’உண்மையை சொல்லு! சூரியனே எங்க வீட்டு மொட்ட மாடில தான இருக்க” என்று மீம்ஸ்களை சோசியல் மீடியாக்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், சென்னையில் மதியம் 2.30 மணி வரை கொளுத்திய வெயில் தற்போது காணாமல் போய், மழை வெளுத்து வாங்க தொடங்கியது. ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 


இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 


23.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


24.04.2023 மற்றும் 25.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


26.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


வெப்பநிலை எப்படி..? 


அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்று வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.