சென்னையில் 4 வயது மகனை மீட்டுத்தரக்கோரி கணவர் வீட்டு முன் இளம் பெண் தாயுடன் தர்ணாவில் ஈடுபட்டார். உள்ளே வந்தால் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக மாமியார் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவன் மனைவிக்கிடையே தகராறு
சென்னை போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். வழக்கறிஞரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த மதுமாலா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு 4 வயதில் கோஷல் என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்கேடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டதால் மதுமாலா சில மாதங்களுக்கு முன் மகனை அழைத்துக் கொண்டு கர்நாடகா சென்று விட்டார்.
வழக்கு தொடர்ந்த மனைவி
செந்தமிழ்செல்வன் கர்நாடகா சென்று தன் மகனை வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வந்ததாக தெரிகிறது. மது மாலா இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன் மகனை மீட்டுத்தரக்கோரி மைசூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நிலையில் இதுவரை குழந்தை மது மாலாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குழந்தையை அவர் பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தர்ணாவில் ஈடுபட்ட மனைவி
தனது குழந்தையை பார்க்க அனுமதிக்காததால் மது மாலா நேற்று கெருகம்பாக்கத்தில் உள்ள கணவரின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்றார். செந்தமிழ் செல்வன் வீட்டில் இல்லாத நிலையில் மருமகளை பார்த்த மாமியார் கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மது மாலா நேற்று முன் தினம் இரவு முதல் தனது தாயுடன் வீட்டின் முன் அமர்ந்து விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். வீட்டின் உள்ளே வந்தால் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக மாமியார் மிரட்டியதால் போலீசாரால் உள்ளே செல்ல முடியவில்லை.
மாயமான குழந்தை:
நேற்று மாலை வீட்டில் இருந்த மாமியார் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ஆம்புலன்சை அழைத்துள்ளார். பின் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மது மாலாவின் மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கதவை திறந்த போது, மதுமாலாவும் போலீசாருடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுமாலா நேற்று முன் தினம் மாலை முதல் வீட்டின் முன்புறம் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
மதுபாலா வீட்டின் முன் இருந்த நிலையில் யாரும் வீட்டின் உள்ளே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மொட்டை மாடி வழியாக சென்று அருகில் உள்ள வீட்டார் உதவிடன் குழந்தை எங்கேனும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுமாலா, செந்தமிழ் செல்வனின் வீட்டை பூட்ட விடாமல் தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.