சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. 617 ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் இந்திய அளவில் முதன்மையான தொழிற்கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதக் கணக்கெடுப்பின்படி, 188 நாய்கள் இந்த வளாகத்தில் இருந்துள்ளன. தன்னார்வலர்கள் வளர்த்து பாதுகாக்கிற பணியை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்று, கண்காணிக்கிற பணியை ஒரு குழு அமைத்து மாதந்தோறும் கவனித்து வருகிறது.





இந்த வளாகத்தில் 10 ஆயிரத்து 600 சதுர அடியில் இரண்டு கொட்டகை அமைத்து 9 நிரந்தர பணியாளர்களைக் கொண்டு, செல்லப்பிராணிகளுக்கு தேவையான உணவு, அவற்றை பராமரிக்கிற பணிகளைச் செய்து வருகின்றனர். 14 நாய்ள் வெறித்தனம் இல்லாத வகையில் இருந்ததால் அவை வெளியில் விடப்பட்டிருக்கின்றன. கடந்தாண்டில் 56 நாய்கள் இறந்துள்ளன. வெளியில் இருந்து வளர்க்க கேட்டவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பட்டியலை கேட்டுள்ளோம்.


87 நாய்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. 56 நாய்கள் இறப்புக்கான காரணம் என்னவென்று கேட்டபோது, நோய் காரணமாகவும், முதுமை நிலையிலும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நாயின் உடல் மட்டும் உடற்கூராய்வுக்கு கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடற்கூராய்வு முடிவு வந்தபிறகு, நாய்கள் இறந்தததற்கான உண்மைத்தன்மை தெரியவரும்.





செய்தித்தாள்களில் நாய்கள் இறந்த செய்தி வந்தவுடன் சென்னை மாநகராட்சி இணை ஆணையர், துணை ஆணையர், கால்நடை பாதுகாப்பு அலுவலர் ஆகியோரோடு நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். ஐ.ஐ.டி. இயக்குநர், பதிவாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் சொல்லும் காரணம், இந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் 200 மான்கள் இருக்கின்றன. அதில் ஒரு அரிய வகை மானும் இருக்கிறது. இதில், குட்டிமான்களை வேட்டையாடுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.


அதற்கான புகைப்படம், வீடியோ ஆதாரங்களை காண்பித்தார்கள். மான்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாங்கள் அவர்களிடம் கூறியது நாயும், மானும் இரண்டுமே உயிர்கள்தான். இரண்டு உயிர்களையும் ஒரேபோல பராமரிக்கச் சொல்லியிருக்கிறோம்.





2018ம் ஆண்டு 92 மான்கள் இறந்திருக்கின்றன. அதில் 55 மான்கள் நாய் கடித்து இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டு 38 மான்களும், 2020ம் ஆண்டு 28 மான்களும், 2021ம் ஆண்டு 3 மான்களும் இறந்துள்ளன. இந்தாண்டுதான் குறைந்த எண்ணிக்கையில் மான்கள் இறந்துள்ளன. நீதிமன்ற தீர்ப்பின்படி, இங்கு புதிதாக வருகின்ற நாய்களைப்பற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


நாய்களை கேட்கும் தன்னார்வலர்களிடம் பராமரிப்பதற்கான வசதிகள் இருக்கிறதா? எனக் கண்டறிந்து அதன்பிறகு அவர்களிடம் வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். என்.ஜி.ஓ.க்களிடம் கொடுத்து பராமரிக்க முடியவில்லை என்றால் சிக்கலாகிவிடும். இதனால், மாநகராட்சி சுகாதார அலுவலர்களும், கால்நடை பாதுகாப்புத்துறை அலுவலர்களும் கண்காணித்து பிறகு அவர்களிடம் தர வேண்டுமென்று தெரிவித்துள்ளோம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண