அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அதிமுக பொன்விழா ஆண்டாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.சோம சுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள களக்காட்டூர், ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம், தேரடி, கருக்குப்பேட்டை, வாலாஜாபாத், உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்சியின் நிறுவனர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளையும் அன்னதானத்தையும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன்,மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சத்தியா, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி.க. நாகராஜன், தும்பவனம் டி ஜீவானந்தம்,ராஜூ, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள நகர, கிராம அதிமுக கிளைக் கழகங்கள் சார்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுகவினர் பொன்விழாவை மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் அதிமுகவின் கிளை கழகங்களில் அதிமுகவின் கட்சி கொடியேற்றி விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் அதிமுகவின் மாவட்ட கவுன்சிலரான காஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொன்விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . அதேபோல் மாணவ மாணவிகளுக்கு நோட், புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதிமுக பொன்விழா
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் கொண்டாட அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை பொன்விழாவை தொடங்கி வைக்கின்றனர். நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிடுகின்றனர்.
பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக் கொண்டனர்.