வீராங்கனை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  விசாரணைக்கு பயந்து தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னை பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் 19 வயதுடைய இளம்பெண் ஒரு தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது புகார் ஒன்றை கூறியிருந்தார். அதில், கடந்த 2013  முதல் 2020 வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தடகள பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர் நாகராஜன், பயிற்சியை முடித்தபின் பிசியோதெரபி பயிற்சி என்ற பெயரில் என்னிடம் பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.  இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால், தடகளப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கமாட்டேன் என்று மிரட்டுவார். என்னைப் போல சில வீராங்கனைகளிடம் நாகராஜ் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டிருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், “ தடகள பயிற்சியாளர் நாகராஜன் சரக்கு மற்றும் சேவை வரித்துறையில் பணியாற்றி வருகிறார். அவர் மீது வீராங்கணை ஒருவர் புகார் கூறியுள்ளார். ஒத்துழைக்க மறுத்ததால், பயிற்சியாளர் தனது பயிற்சியை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அழித்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதுபோல் சிலரையும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.




இந்த ஆண்டு பிப்ரவரியில் பயிற்சியாளருக்கு எதிராக இதேபோன்ற பாலியல் துன்புறுத்தல் புகாரை சங்கம் பெற்றுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளை பயிற்சியாளர் மறுத்ததாகவும் தமிழக தடகள சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர் கூறியுள்ளார்.


பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணான 9444772222  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் வெளியே தெரியாமல், ரகசியமாக பாதுகாக்கப்படும்” என்று கூறினார்கள்.


புகார் தொடர்பாக பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.  விசாரணைக்கு பயந்து தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




(ஆசிரியர் ராஜகோபாலன்)


சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் உள்ள மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவிகள் பாலியல் புகார் கூறினார்கள். தற்போது, பயிற்சியாளர் மீது வீராங்கனை ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். பள்ளி மற்றும் பயிற்சி மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவது பெற்றோர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.