Southern Railways Suburban Train: தெற்கு ரயில்வேயின் புதிய புறநகர் ரயில் சேவை வேலைக்கு செல்வோருக்கு, பெரும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
புறநகர் ரயில் சேவை:
தெற்கு ரயில்வேயின் புறநகர் ரயில் சேவை என்பது, சென்னையின் அண்டை மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள், தங்களது அன்றாட பணிகளுக்காக இந்த புறநகர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். வணிகம், தொழில், வேலை, மருத்துவ சிகிச்சை, உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது மற்றும் குடும்ப நிகழ்ச்சி என பல்வேறு காரணங்களுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து புறநகர் ரயில் மூலம் பொதுமக்கள் சென்னைக்கும், இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கும் பயணித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகள்:
சென்னை புறநகர் ரயில் சேவையின் (Chennai suburban railway) தேவையானது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு, 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது நான்கு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் சென்னை பெருநகரத்தில் இருந்து புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதிகரிக்கும் பயணிகளும், தேவையும்..!
வேலைவாய்ப்புக்கான அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருதரப்பினர் பிழைப்புக்காக சென்னையிலேயே குடியேறிவிட்டாலும், மற்றொரு தரப்பினர் புறநகர் ரயில்களில் தினசரி மணிக்கணக்கில் பயணித்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். இதனால், தினசரி பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசல் பெருகி, புறநகர் ரயில் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்தே தெற்கு ரயில்வே புதியதாக நான்கு புறநகர் ரயில் சேவையை தொடங்கியுள்ளது.
புதிய புறநகர் ரயில் சேவைகள்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “
- . மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் புதிய புறநகர் ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும்.
- ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரயில் ஆவடியில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும்.
- மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு செல்லும் புதிய புறநகர் ரயில் மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
- கும்மிடிபூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரெயில் கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது
நேற்று (மார்ச் 3) முதல் இந்த ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை இயக்கப்படும் நேரத்தை கவனித்தால், அதிகாலையில் முதல் வேலைக்காக சென்னை நோக்கி புறப்படும் பயணிகளையும், வேலை முடிந்து மாலை நேரங்களில் புறநகர் நோக்கி புறப்படும் பயணிகளையும் கருத்தில் கொண்டு, புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு இருப்பதை உணரலாம்.
மூர் மார்கெட் - ஆவடி புறநகர் ரயில் சேவை
மூர் மார்கெட் மற்றும் ஆவடி இடையேயான புறநகர் ரயிலானாது, பேசன் பிர்ட்ஜ் சந்திப்பு, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், கொரட்டூர், பட்டரவாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், அன்னனூர், இந்து காலேஜ் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக பயணித்து இறுதியாக பட்டாபிராம் சென்றடையும்.
மூர் மார்கெட் - கும்மிடிபூண்டி புறநகர் ரயில் சேவை
மூர் மார்கெட் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயிலானாது, பேசன் பிரிட்ஜ் சந்திப்பு, கொருக்குப்பேட்டை சந்திப்பு, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், அத்திப்பட்டு புது நகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்கள் வழியாக கும்மிடிப்பூண்டி சென்றடையும்.
எனவே, புதிய புறநகர் ரயில் சேவைகள் மூலம், மேற்குறிப்பிடப்பட்ட பகுதி மக்கள், அலுப்பின்றி பயணம் செய்ய முடியும். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய சூழலும் தவிர்க்கப்படும்.