இரண்டு பாம்புகள் காலில் ஏறுவதைக் கூட கவனிக்காமல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மும்முரமாக ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருந்த பள்ளி மாணவனை பாம்பு  கடித்துள்ள சம்பவம் உளுந்தூர்பேட்டை  பகுதியில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள  M குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்குபாலன் , விவசாய கூலியாக உள்ளார் . இவருக்கு திருமணம் ஆகி 10 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர் .




இதில் மூத்த மகன்  மணிகண்டன் (16 ), இந்தாண்டு 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்ததாலும் ,கொரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வந்தன. வகுப்புக்கு மொபைல் வேண்டும் என்பதால்,  வேலை இல்லா சூழலிலும் மிகவும் சிரமப்பட்டு தனது மகனின் எதிர்காலத்தின் மீது கொண்டிருந்த அக்கறையால் மணிகண்டனுக்கு , ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார் சங்குபாலன் .


கொரோனா பரவல் காரணமாக, தமிழ் நாடு பள்ளி கல்வித்துறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து  , மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என அறிவித்தது. இதனால் மணிகண்டன் முழுநேரமும் தனது மொபைல் போன் மூலம்  , தனது சக பள்ளி மாணவர்களுடன் ஆன்லைன் கேம் விளையாடுவது, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் மூழ்கிப்போய் இருந்துள்ளார்  .


இந்நிலையில் நேற்று மதியம் M குன்னத்தூர் கிராம ஏரிக்கரையில் அமர்ந்தபடி இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு இருந்த பொழுது , ஏரியில் இருந்து வெளியில் வந்த இரண்டு தண்ணீர் பாம்பு மணிகண்டன் கால் மீது ஏறியுள்ளது . இதை துளியும் கவனிக்காத மணிகண்டனை , பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் கத்தி கவனிக்க செய்தனர். இரண்டு பாம்புகள் ஒன்றாக காலில்  ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் , அலறியபடியே ஓட தொடங்கியுள்ளார் . இதில் ஒரு பாம்பு மணிகண்டனை கண்டித்துள்ளது .


கடித்த பாம்புடன் , பாதிக்கப்பட்ட மாணவனை அவனது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கையில் கொண்டுசென்ற பாம்பு தண்ணீர் பாம்புதான் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் , தப்பித்து சென்ற மற்றொரு பாம்பு விஷ பாம்பாக இருக்க கூடும் , என்ற சந்தேகத்தில் மணிகண்டனை , 6   நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்து 3 முறை ரத்த மாதிரி பரிசோதனை செய்த மருத்துவர்கள் , கடித்தது விஷ தன்மை இல்லாத பாம்புதான்  என்பதை உறுதி செய்து  அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர் .