இந்தியாவின் முக்கிய நகரமாகவும், தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் சென்னை விளங்குகிறது. சென்னையில் ஐ.டி மற்றும் தொழிற்சாலைகளில் முக்கிய நகரமாகவும் சென்னை விளங்குவதால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் பணிக்காக சென்னைக்கு வருகின்றனர்.
வழிகாட்டி:
பரந்து விரிந்த சாலைகள் கொண்ட சென்னை நகரில் போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் தெருக்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மக்களுக்கு மிகவும் வழிகாட்டியாக உள்ளது.
ஆனால் பல இடங்களில் உள்ள பெயர் பலகைகள் சேதமடைந்தும் அல்லது பெயர்கள் இல்லாமலும் காணப்படுகிறது. இதன் காரணமாக போக வேண்டிய இடம் தெரியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிக்காக பலகைகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் பலகைகள் அமைக்கப்படாமல் உள்ளது.
சிங்கார சென்னை 2.0
சில இடங்களில் பலகைகள் சேதம் அடைந்து கீழே கவிழ்ந்தும் கிடக்கின்றன. பெயர் பலகைகளின் மீது சுவரொட்டி ஒட்டுவதாலும் அவை அடையாளம் தெரியாமல் காட்சி அளிக்கின்றன. மேலும் பல இடங்களில் தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெயர் பலகை தெரியாமல் மறைக்கின்றனர்.
இதையடுத்து, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பெயர் பலகைகளை மாற்றி புதிய பெயர் பலகை வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முப்பரிமாண தோற்றத்தில் பலகைகள்:
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், சென்னையில் உள்ள 30 ஆயிரம் தெருக்களில் சேதமடைந்து காணப்படும் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு, புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு ரூ.8.7 கோடி மதிப்பில் 8 ஆயிரம் பெயர் பலகைகள் மாற்றப்பட்டு உள்ளன. இதையடுத்து, மீதமுள்ள பெயர் பலகைகளை மாற்றும் பணியும் படிப்படியாக நடைபெறும்.
புதிய பெயர் பலகைகளானது, ஆடம்பரமாக சிங்கார சென்னை 2.0 லோகோவுடன் காணப்படும். மேலும், இரவிலும் தெளிவாக தெரியும் வகையில் முப்பரிமாண தோற்றத்துடன் காணப்படும்.
பெயர் பலகைகள் டிஜிட்டல் முறையில் அச்சிடப்படும், அவை 8 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பெயர் பலகையின் விலையும் ரூ.4,500 மதிப்பாகும். முன்பு இருந்த பெயர் பலகைகளை விட இது தரமானது என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.