தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் செங்கல்பட்டில் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமை மனுநீதி நாள் அல்லது வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளை அறிவித்து மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி அதிகாரிகளை வரவைத்து, அடையாள சான்று, ரயில் பயண சலுகை, பேருந்து உதவியாளர் பயண சலுகை சான்றுகள் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள அரசு உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான கோட்டாட்சியர் மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டத்திலும் இதேபோன்று சான்றுகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
அடையாள சான்று வழங்கும் அனைத்து இடங்களிலும், அனைத்து விதமான உதவித்தொகைகள் பதிவது, தேவைப்படுவோருக்கு உதவி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்டட அனைத்து நலத்திட்டங்களும் ஒற்றைசாளர முறையில் வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி சான்றுகள், உபகரணங்கள் வழங்க பல்நோக்கு அடையாள சான்று பல மாவட்டங்களில் கட்டாயப்படுத்தப்படும் புகார்கள் வருகின்றன.மத்திய, மாநில அரசுகள் இந்த சான்று வழங்க உரிய நிதி ஒதுக்கி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுத்து முடிக்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும்போது, இந்த சான்று பெற்றிருக்க வேண்டும் என வற்புறுத்துது சட்ட விரோதமானது. எனவே, இச்சட்டவிரோத வாய்மொழி உத்தரவுகளை எல்லாம் அதிகாரிகள் கைவிட வேண்டும்
100 நாள் வேலை
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர தெரிவுசெய்யப்பட்ட பணிகள், முழு ஊதியம், முழுமையான வேலை உள்ளிட்டவைகள் வகைசெய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இது குறித்து அரசாணை எண்.52 மற்றும் 2018 ஊரக வளர்ச்சி ஆணையரின் வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளன. சமீபகாலமாக 100 நாள் வேலை பணிகளுக்கு வரும்போதும், திரும்பி செல்லும்போதும் தொழிலாளர்களை புகைப்படம் எடுக்கும் நடைமுறையை ஊரகவளர்ச்சித்துறை கொண்டு வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விதிகள் இருந்தும், மற்றவர்களோடு வரவேண்டும் என்றும், மற்றவர்கள் 8 மணிநேர வேலை முடித்து திரும்பி செல்லும்போதுதான் செல்ல வேண்டும். அப்போதுதான் புகைப்படம் எடுப்போம் என மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை சட்ட விரோதமாக கட்டடாயப்படுத்துவதும், வீட்டு வரி, குடிநீர் வரி கட்டியிருக்க வேண்டும் என துன்புறுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
ஊரகவளர்ச்சி ஆணையர் அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை சட்டப்படி ஊராட்சிமன்றங்கள் பணிகளை தேர்வு செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளன. ஆனால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தாங்கள் சொன்னால்தான், விரும்பினால்தான் வேலை தருவோம் என தலையீடு செய்வதும், இதற்கு அதிகாரிகளும் சட்டவிரோதமாக உடந்தையாக இருப்பதும் தொடர்கின்றன. பல மாவட்டங்களில் இதற்காகப் போராட்டங்கள் நடந்தும், பிரச்சனைகள் தீரவில்லை. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தை வருகின்ற மே மாதம் 17 ஆம் தேதி 100 நாள் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000, முதுகுதண்டுவடம் உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளானோருக்கு ரூ.5000ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மார்ச்-22 அன்று கோட்டையில் குடியேறும் போராட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்தியது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்பதாகவும், ரூ.500 உயர்வு என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுவதாகவும், படிப்படியாக உதவித்தொகையை உயர்த்துவதாக முதலமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் அறிவித்தார்.
அதன் பின் சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மானியக் கோரிக்கை விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் உதவித்தொகை உயர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என மாற்றுத்திறனாளிகள் நம்பினர். ஆனால், இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்களுடன் முதலமைச்சர் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு எந்தவிதத்திலும் மாற்றுத்திறனாளிகளை திருப்திப்படுத்தவில்லை. அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் உயர்நீதிமன்றம்கூட விமர்சித்துள்ளது. எனவே, முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வாக்குறுதிகளின்படி உதவித்தொகையை உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளை மீண்டும் தீவிரப் போராட்டத்திற்கு தள்ளக்கூடாது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளனர். கூட்டம் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி, மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதிஅண்ணா, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் தாட்சாயினி, மாவட்ட செயலாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் அருள்ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.