குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான், என்ற அருள்மொழி தமிழகத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படியிருக்க குன்றத்தூர் என்ற பெயர் கொண்ட ஒரு குமரன் இல்லாமல் இருந்தால் எப்படி? சென்னை அடுத்து உள்ள குன்றத்தூரில் சுப்பிரமணியர் பெயரில் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். தமிழ் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நிறைய பெயர்கள் இருந்தாலும் ‘சுப்பிரமணியர்’ என்ற பெயருக்கு தனிப்பட்ட பொருள் இருக்கிறது. அதாவது ஞானத்தை தனது அடியார்களுக்கு அருள்கின்றவன் என்று அர்த்தமாகும். ஞானத்தின் திருவடிவாக முருகனது உருவம் திகழ்வதாக பல்வேறு மகான்கள் விளக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முருகனை மனதால் நினைத்தால்கூட ஞானம் ஏற்படும் என்பது அடியார்களது நம்பிக்கை. அத்தகைய சுப்பிரமணியர் கோவில்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளன.
சிறு குன்றின்மீது அமைக்கப்பட்ட இக்கோவிலை தரிசிக்க 84 படிகளுக்கும் மேலாக ஏறிச்செல்ல வேண்டும். வழியில் இருக்கும் வலஞ்சுழி விநாயகர் நமது தடைகளை சுலபமாக விலக்கி அருள் புரியக்கூடியவர். அவரை அன்புடன் வணங்கிவிட்டு மேலே சென்றவுடன் கலைத்திறனுடன் அமைக்கப்பட்ட கொடி மரத்தை தரிசிக்கலாம். கொடி மரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபட செல்ல வேண்டும். இந்த திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார்.
கருவறை சன்னிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. கருவறையில் முருகன், தெய்வானை, வள்ளி ஆகிய திருமூர்த்தங்கள் உள்ளன. கருவறைக்கு வெளியில் நின்றபடி மூவரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது சிரமம். காரணம் கருவறை மற்றும் சிலைகளின் வடிவமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதென்றால், ஒரு பக்கமாக நின்று தரிசனம் செய்யும்போது முருகனும், வள்ளியும் மட்டும் தெரிவார்கள்; தெய்வானையின் உருவம் தெரியாது. இன்னொரு பக்கத்தில் நின்று தரிசித்தால் முருகனும், தெய்வானையும் தெரிவார்கள்; வள்ளியின் உருவம் தெரியாது.
கருவறைக்கு வெளியே வாசலில் நின்று தரிசிக்கும்போது மூவரையும் ஒரு சேர தரிசனம் தர மாட்டார்கள். மூலவரான முருகனை மட்டுமே பார்க்க முடியும். பக்தர்களது பெரும் நம்பிக்கையானது இத்தலத்து முருகனுக்கு திருமணத்தடைகளை விலக்கக்கூடியவராக விளங்குகிறார் என்பதாகும். அதன் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்கிறார்கள்.
மூலஸ்தான தரிசன வைபவம் முடிந்த பிறகு திருக்கோவிலை வலம் வரவேண்டும் என்பது ஆகம விதியாகும். அப்படி முருகனது சன்னிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. மூலவர் சன்னிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.
பாடல் பெற்ற இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் அனைவருக்கும் பிரசாதமாக தரப்படுகிறது. கந்த சஷ்டி விழாவானது இத்தலத்தில் எட்டு நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். சூரசம்ஹார விழாவின் 6-வது நாள் சூரசம்ஹாரம். 7-வது நாள் வள்ளி திருமணம். 8-வது நாள் தெய்வானை திருமணம் என்ற முறையில் விழா நடத்தப்படுகிறது. இங்கு சிவாகம முறைப்படி அன்றாட பூஜைகள், வாராந்திர பூஜைகள், மாதாந்திர பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
குன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர். எனவே மலை அடிவாரத்தில் அவருக்கு தனி சன்னிதி உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மூன்று நிலையில் அமைக்கப்பட்ட ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வில்வமரத்தடி விநாயகர் என்று சிறப்புற விளங்குகிறது குன்றத்தூர் முருகனின் திருக்கோவில்.
இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக கடைப்பிடித்து வரப்படுகிறது. தங்களது பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கும் எடை பழம், சர்க்கரை, வெல்லம் என்று ஏதாவது காணிக்கையாக செலுத்துவது வழக்கம். குழந்தைகளுக்கு வரக் கூடிய உடல் ரீதியான கடுமையான நோய்களுக்கு இங்கு வந்து, தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, ‘இது உனது குழந்தை அதனால் நீயே காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லி முருகனுக்குத் தத்து கொடுத்து, வழிபாடுகள் செய்து முடித்து குழந்தையை அழைத்து சென்று விடுவார்கள். அந்த குழந்தையை கந்த கடவுள் குறைகள் ஏதுமின்றி காப்பார் என்பது பக்தர்களது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின் மீது அமர்ந்தார். குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருவதை காணலாம். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதன் பிறகு இத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக தலவரலாறு கூறுகிறது. இத்தனை சிறப்பு மிக்க குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராஜ கோபுரத்தின் மீதும், மூலவர் கோபுரம் உள்ளிட்ட பிற கோபுரங்களிலும் கலசங்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மேற்பட்ட பக்தர்கள் மலையை சுற்றி திரளாக கூடியிருந்து மகா கும்பாபிஷேகத்தை கண்குளிர தரிசனம்செய்தனர். பக்தர்களின் வசதிக்காக புனிதநீரை பருந்து வசதியுடன் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் மகா கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர் . கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டார்