செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பழனி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளையும், மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் கோகுல் ஸ்ரீ (17) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் ( சீர்திருத்தப்பள்ளி)  6 மாதம் கைதியாக இருந்து வந்துள்ளார் . 17 வயது சிறுவன் கோகுல் ஸ்ரீ கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 


 

பேட்டரிகளை திருடிய வழக்கு

 

இந்த நிலையில் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் எல்லைக்கு உட்பட்ட, தாம்பரம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய வழக்கு சம்பந்தமாக கடந்தமாதம்  29 ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிசம்பர் 30 ஆம் தேதி மாலை நீதிபதி முன்னிலையில், ஆஜர்படுத்தி விட்டு செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் பிரியாவின் மூத்த மகனை அடைத்துள்ளனர்.

 

திட்டமிட்டு மறைத்த போலீஸ்

 

இதனை அடுத்து டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பிரியாவிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட சிறப்பு இல்ல காவலர்கள், தங்களின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போலீசார் மகன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். வலிப்பு வந்ததால் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோரிடம் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 


"மகன் சாவில் மர்மம்"

 

இதனையடுத்து, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக  கூறி தாய் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் 176(1)(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து நீதிபதி ரீனா முன்னிலையில் உடல்கூறாய்வு நடைபெற்றது. இதனை அடுத்து தாய் பிரியா தனது மகனின் உடலை பெற்றுக் கொண்டு செங்கல்பட்டு அடுத்துள்ள பழவேலி என்ற பகுதியில் இறுதி சடங்குகளை செய்தார். 

 

"நீதிபதி விசாரணை"

 

முன்னதாக, நீதிமன்ற காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்த காரணத்தினால், நீதிபதி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுகுறித்து தாயும் புகார் அளித்ததால், சம்பவம் நடந்து பெற்ற செங்கல்பட்டு சிறப்பு இல்லத்திற்கு நேரடியாக சென்று நீதிபதி விசாரணை மேற்கொண்டார். சுமார் 26 சாட்சியங்களை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலயே சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து , சுமார் 10 நாட்கள் நீதிபதி தீவிர விசாரணையை மேற்கொண்டார். மேலும் சிறுவன் உயிரிழப்புக்கு, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காரணமில்லை எனவும் நீதிபதி விசாரணையில் தெரியவந்தது.

 

"7 பேர் கைது"

ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, தனது விசாரணையில் தெரிய வந்த உண்மைகளை, செங்கல்பட்டு நகர காவல் துறையினருக்கு அறிக்கையாக அளித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு நகர போலீசார் நீதிபதியின் அறிக்கையில் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்டதில் , சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு ,வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஜ், விஜயகுமார் ஆகிய ஆறு பேரை கைது செய்து டிஎஸ்பி பரத் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில் 6 பேரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  6 பேர் மீதும் கொலை வழக்கு (302) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று மருத்துவ உதவியாளர் நந்தகோபால் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

 

 ஆணைய பதிவாளர் விசாரணை

 

இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


 

சீர் நோக்கு இல்லத்தில் நடந்தது என்ன ?

 

ஏற்கனவே, சிறை வந்து  சென்ற கோகுல் ஸ்ரீ சற்று திமிராகவே அந்த இல்லத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அங்கிருந்த பிரம்பை கொண்டு கோகுல் ஸ்ரீயை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வலி தாங்காத சிறுவன், காவலர் ஒருவரின் கையை கடித்துள்ளார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த  சிறை வார்டன் மற்றும் காவலர்கள் கோகுல் ஸ்ரீ கண்மூடித்தனமாக தாக்கியதில் , வலது ,கை மற்றும் இடது கை பகுதிகள், வாய் , பின்புறம் ,முதுகு, தொடை, குதிகால் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக, உடலில் பல இடங்களில் ரத்தம் கட்டி துடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இதிலிருந்து, தப்பிப்பதற்காகவே சிறுவனுக்கு வலிப்பு வந்து விட்டதாக காவலர்கள் நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவலர்களை சிறுவனை அடித்தே கொன்ற சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.