சென்னை பூவிருந்தவல்லிஅருகே வட மாநில தொழிலாளர்கள் நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களாக கலந்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ராஜாமணி- பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று ராஜாமணியின் அழைப்பை ஏற்று திருமண மண்டபத்திற்கு வந்த வடமாநில தொழிலாளர்களை கண்டு உறவினர்களும், அப்பகுதி மக்களும் ஷாக்காகி போயினர். காரணம் தங்களது உரிமையாளரை சகோதரன் போல் பாவித்து வட மாநில தொழிலாளர்கள் கையில் சீர்வரிசையுடன் வருகை தந்தனர். மேலும் உறவினர்கள்போல பெண்ணிற்கு நலங்கு வைத்து மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். ராஜாமணி குடும்பத்தினரும் வட மாநில தொழிலாளர்களை நன்கு உபசரித்தனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவிய நிலையில், இந்த சம்பவம் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் பாதுகாப்பாகவும், மக்களின் நல்மதிப்பையும் பெற்றிருப்பதையும் காட்டுவதாக அமைந்துள்ளது.