ஆட்டுக்குட்டி, கன்று குட்டி , கோழி இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு சீதனங்களை கொடுத்து அசத்திய தாய் மாமன் வைரலாகி வருகிறார்
தாய் மாமன் உறவு
தமிழர் வழி உறவில் தாய் மாமன் உறவு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தாய் வழியில் இருக்கின்ற உறவுகளிலே மிகவும் முக்கிய உறவாக தாய்மாமன் உறவு பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.
தாய் வீட்டு சீர்வரிசை
பெண் பிள்ளையை கட்டிக் கொடுக்கும் வீட்டில், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அதை முன் நின்று , அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் உறவாக தாய்மாமன் உறவு உள்ளது. அந்த வகையில் தாய்மாமன் உறவுக்கு கொடுக்கும் மிக முக்கிய அங்கீகாரமாக தங்கை மகள் பூப்பெய்திய தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன் உறவு வழங்குவது. இது காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரமாகும்.
தமிழர் மரபுவழி வாழ்வியல்
குறிப்பாக தாய்மாமன் கொடுக்கும் சீர் என்பது, ஒரு சிறு துரும்பு என்றால் கூட அந்த சிறு துரும்பிற்கு தான் சபையில் , மதிப்பு அதிகம் என பெரியோர்கள் கூறுவார்கள். தற்பொழுது வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில் மரபு வழி கலாச்சாரங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் காஞ்சிபுரத்தில் ஊரையே வியக்க வைக்கும் வண்ணம் தாய்மாமன் ஒருவர் பாரம்பரிய முறைப்படி சீர் வழங்கி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரையே வியர்க்க வைத்த தாய்மாமன் சீர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டி கிராமத்தைச் சேர்ந்த S.K. சகாயராஜ் மற்றும் ரூபி தம்பதியின் மகள் மெர்லின். இவரின் மகள் மெர்லின் பூப்புனித நீராட்டு விழா சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தனியார் திருமணம் நடத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களை வரவேற்க ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
ஆட்டுக்குட்டி முதல் இரு சக்கர வாகன வரை
இந்நிலையில் நிகழ்ச்சியின் முக்கிய பிரமுகர் ஆன மெர்லின் அவர்களின் தாய்மாமனான S.K. பாண்டியன் மற்றும் சபிதா தம்பதியர் ஊரே திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தாய்மாமன் சீராக S.K.பாண்டியன் மாட்டு வண்டியில் பல்வேறு வகையான பழ வகைகள், பூ வகைகள் ஏராளமான வரிசை தட்டுகள் வைத்து ஐந்துக்கு மேற்பட்ட மாட்டு வண்டி வாகனத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர். அதேபோன்று தாய்மாமன் சீராக ஆட்டுக்குட்டிகள், கன்று குட்டி, கோழி இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் வழங்கி உள்ளார்.
வானவேடிக்கை
வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சியாக பேண்ட் வாத்தியங்களுடன் பொம்மை ஆட்டம், வானவேடிக்கை, சரவெடி போன்ற பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டனர். பொதுவாக பெண் குழந்தைகளுக்கு முதன்மையான சீராக விளங்கும் தாய்மாமன் சீரை ஊரை சுற்றி பார்க்கும் அளவிற்கு கொண்டாடும் வகையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தாய்மாமன் சீரை பொதுமக்கள் ஏராளமானோர் மெய்மறந்து பார்த்தனர்.