வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிபேட், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கனமழை
நேற்று நள்ளிரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழையானது பெய்து வருகிறது. நள்ளிரவில் துவங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, தண்டராம்பட்டு, செங்கம், கண்டமங்கலம், போளூர், ஜவ்வாது மலை, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் மழையானது பெய்துள்ளது. திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேங்கி கால், தாமரை நகர், செங்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதலே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை பகுதி முழுவதும் குளுமையான காற்று வீசி வருகிறது. காலையும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எவ்வளவு கனமழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அதிக அளவாக தண்டராம்பட்டு 24.80 மில்லி மீட்டரும், ஆரணியில் 65.40 மில்லி மீட்டரும், வெம்பாக்கம் 0.00 மில்லி மீட்டரும், வந்தவாசி 0.00 மில்லி மீட்டரும், சேத்துப்பட்டு 2.60 மில்லி மீட்டரும், ஜமுனாமரத்தூர் 3.00 மில்லிமீட்டரும், கீழ்பெண்ணாத்தூர் 5.00, மில்லிமீட்டரும், போளூர் 0.00 மில்லி மீட்டரும், திருவண்ணாமலை 2.00 மில்லி மீட்டரும், கலசபாக்கம் 00.00 மில்லி மீட்டரும், செங்கம் 34.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தில் நெல் நடவு செய்யும் அளவிற்கு மழை பொழிந்துள்ளாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது என்ன ?
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது வரை மழை பெய்யும்.