காங்கிரஸ் கட்சியில் புது நிர்வாகிகள்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்  


இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர் ; 


காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சீரமைப்பு, மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பம் பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இணையதள முகவரிக்கு விருப்ப மனுவை அளிக்கலாம். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 7 ஆம் தேதி காலையில் , மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் , முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.


மாநில அளவில் பதவி , எம்.எல்.ஏ பதவிகளுக்கு முன்னுரிமை


வருகிற 8 ஆம் தேதி கிராமந்தோறும் காங்கிரஸ் என்ற தலைப்பில், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடக்கிறது. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜேய் குமார், சூரச் ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.


கிராம, நகர, பேரூராட்சி, மாநகராட்சி கமிட்டியை யாரெல்லாம் சிறப்பாக செய்து முடிக்கிறார்களோ அவர்களுக்கு மாநில அளவில் பதவி , எம்.எல்.ஏ போன்ற பதவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும்.


பொங்கல் திருநாளில் ஒவ்வொரு ஆண்டும் ரேசன் அட்டை காரர்களுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பார்கள்‌. அதன்படி இந்த ஆண்டும் குறைந்தபட்சம் அரசு 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.


இதை செய்தால் " யார் அந்த சார் " தெரிந்து விடும்


அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது. தற்போது இந்த வழக்கை சிறப்பு குற்றப் புலனாய்வு குழு விசாரிக்கிறது.


மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை ஆய்வு செய்தாலே, "யார் அந்த சார்" என்று தெரிந்து விடும். எந்த சார் ஆக இருந்தாலும் அவர் மாட்டி கொள்வார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் தொலைத்தொடர்பு ஆணையம் இருக்கிறது. 


ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதானிக்கு எதிரான போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினரும் கைது செய்யப்பட்டு, எவ்வித வசதியும் இல்லாத இடத்தில்தான் அடைத்து வைக்கப்படிருந்தனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பா‌.ஜ.க., அ‌.தி.மு.க. அரசியலாக்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது. அது இயற்கையாகவே காங்கிரஸ் தொகுதிதான்.


கும்பகோணத்தில் தி.மு.க கவுன்சிலருக்கும், காங்கிரஸ் மேயருக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து மேயர் சரவணனிடம், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் இன்று விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா, துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மற்றும் எஸ்.ஏ.வாசு, டி.அய்யம்பெருமாள், ஓ.பி.சி.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.