வயநாட்டில் ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது : கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வந்துள்ளோம். கடந்த முறை வயநாட்டு தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இம்முறை ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பாசிச சக்திகளை ஒழிக்க வயநாட்டில் இருந்து ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது.

அனைவருக்கும்  - சம உரிமை


தோல்வி அச்சத்தில் பிரதமர் என்கிற தகுதியை மீறி மிகவும் கீழ்த்தரமாக மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் பாசிசவாதியாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மகாத்மா காந்தி இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த போது இந்த மண்ணில் பிறக்கும் அனைவருக்கும், சம உரிமை இருக்கிறது எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் கூறினார். ஆனால் பிரதமர் மோடி மக்களை பிரித்தாலும் கொள்கையில் இறங்கியுள்ளார்.

தோல்வி பயத்தில் பாஜக 


நாங்கள் கூட இந்துதான். ஆனால் அவர் கூறுவதை ரசிக்கவில்லை எதிர்க்கிறோம். இப்படிப்பட்ட பாசிச சக்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தேசத்தின் மக்கள் எல்லாம் புரிந்து கொண்டுள்ளனர். மிகப்பெரிய தோல்வி பயத்தில் பாஜக உள்ளது, 100 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது என ஊடகங்கள் பேசிக் கொள்கிறது. தோல்வி பயத்தில் மக்களிடையே மோதலை உருவாக்க மோடி இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுகளை பேசி வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

எந்த புகார் மீதும் நடவடிக்கை இல்லை


பாஜகவில் உள்ள அமைச்சர் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தோல்வி பயத்தால் மாநிலங்களவை உறுப்பினரான பாஜகவில் எத்தனையோ மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சராக இருக்கிறார்கள். முதலில் இவர்கள் எல்லாம் தோல்வி பயத்தில் மக்களை சந்திக்காமல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்களா என கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் பிரதமர் மோடி அமலாகத்துறை வருமான வரித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறது. அதனால் அவர்கள் மீது எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

சமமான ஆட்சி நடக்கவில்லை


குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை அமலாக்கத்துறை விழிக்காமல் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை என்ன செய்தது சிபிஐ என்ன செய்தது. பாசிச ஆட்சியில் எல்லோருக்கும் சமமான ஆட்சி நடக்கவில்லை. காலை நேரத்தில் சோதனை நடத்தி மாலை நேரத்தில் பாஜகவின் கணக்கில் பணம் போய்விடும் இதுதான் தேர்தல் நன்கொடை பத்திரம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.