வெயிலின் தாக்கம்


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  குறிப்பாக கடந்த சில நாட்களாக வடதமிழ்நாட்டில்  பல்வேறு பகுதிகளில் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் வெப்பநிலை தற்போது ஏப்ரல் மாதம் முதலே பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். வெப்பநிலை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசி வருகிறது இதனால் கூடுதல் அவதி.


 


5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்


இது வரக்கூடிய நாட்களில் அதிகரித்து காணப்படும் என்றும், 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை  திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதாவது 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சுமார் 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவகியுள்ளது.


 குளிர்ச்சியான பொருட்களை விரும்பும் மக்கள்


 வெயில் தாக்கத்திலிருந்து  மக்கள் தங்களை பாதுகாக்க  பல்வேறு குளிர்ச்சியான பொருட்களை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.  தர்பூசணி,  வெள்ளரிக்காய், கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு  குளிர்ச்சியான பொருட்களும் அதிக அளவு குளிர் பானங்களையும் விரும்பி மக்கள் பருகி வருகின்றனர்.


மது குடிப்போர் பாதையே தனிதான்


ஆனால் மது குடிப்போர் வெயிலின் தாக்கத்திலிருந்து, தப்பிக்க "குளுகுளு பீர்' அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக டாஸ்மார்க் கடைகளில் குளுகுளு பீராய் அதிகம் விரும்பி கேட்டு பருகுவதாக  கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.   பொதுவாக தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில்  1 லட்சம் பீர் பெட்டிகள் வரை விற்பனையாகும்.  ஆனால் தற்பொழுது  கடந்த தேர்தல் உள்ளிட்ட சில விடுமுறை காரணமாக டாஸ்மார்க் கடை   வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்று வந்ததாக தகவல்கள்   தெரிவிக்கின்றனர்.  இந்தநிலையில் தற்போது  தமிழ்நாடு முழுவதும் வெயில் வாட்டி  வதைக்க துவங்கியுள்ளது,  இதனால் மது குடிப்போர் அதிகளவு பீர்  வகைகளை விரும்பி வாங்குவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.  டாஸ்மார்க் கடைகளில் கிடைக்கும்  பல்வேறு வகையான  பீர்களை  விரும்பி வாங்கி வருவதால் ஒரு லட்சம்   பெட்டிகள் வரை விற்பனையாகி வந்த நிலையில் , தற்போது அவை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டிகள் வரை  பீர் விற்பனை ஆகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் மூலம் பியர் விற்பனை 40% வரை  அதிகரித்துள்ளதாக  தெரிகிறது.