சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டியல் முந்தைய கால இயற்கை ரசாயனத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பட்டு சேலையும்
காஞ்சிபுரம் நகரம் கோவிலுக்கு மட்டுமல்லாமல் பட்டு சேலைக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் பல பேன்சி சேலைகள் வந்தாலும், பெண்கள் மத்தியில் காஞ்சி பட்டு புடவைக்கு என தனி மரியாதை உள்ளது. காலங்கள் மாறினாலும் பாரம்பரியத்துடன் தற்போது நவீன டிசைன் மற்றும் வண்ணங்களில் தற்போதைய இளம் பெண்கள் பட்டு சேலையில் உருவாக்க்கி அதனை அணிந்து கொள்ள அதிக ஆர்வம் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய பட்டு சேலையில் வண்ணம் சேர்க்கும் பணியினால் சுற்றுச்சூழல் மாசடைந்து குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் மற்றும் ரசாயனங்களால் உடல் தீங்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் முந்தைய காலங்களில் நடைமுறைப் படுத்திய பல்வேறு பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் பட்டு சேலைக்கு சாயம் கொண்டு வரும் பணியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சில நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி மன நிறைவை அளித்தாலும் பொருளாதார ரீதியாக இது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் இதனை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இது குறித்து நெசவாளர் ஜெயராமன் நம்மிடம் பேசுகையில், உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலையில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் இயற்கை முறையில் சாயம் ஏற்றி பட்டு உருவாக்கப்பட்டு அதனை சேலையாக நெய்து வந்தனர். நான் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன். காஞ்சிபுரம் என்றாலே பட்டு சேலை தான் ஞாபகத்திற்கு வரும். காஞ்சிபுரம் சேலை ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டதால் உலகப் புகழ்பெற்று இருந்தது. மீண்டும் இயற்கையாக சாயத்தை பயன்படுத்தலாம் என நான்கு புடவைகளை தயார் செய்துள்ளோம். அரசு சார்பில் டெல்லியில் இந்த சேலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.
இயற்கை முறையில் சாயத்தை கொண்டு வருவது எப்படி ? ( natural dye Silk saree )
அதாவது இயற்கை மூலம் சாயத்தை வைத்து ஒரு சில நிறங்களை மட்டுமே கிடைத்து வந்தது. இதனால்தான் ஆசிட் மூலம் நிறத்தை பட்டு சேலைகளுக்கு கொடுத்து வந்தனர் இது உடலுக்கு உபாதையை ஏற்படுத்தலாம். இதனால் நாங்கள் இயற்கை சாயத்தை கொண்டு வர முயற்சி எடுத்து இருக்கிறோம். இயற்கை சாயத்தை தயார் செய்வதற்கு மாதுளை பழம் பட்டை, மாதுளம் பூக்கள், கடுக்காய் தோல், படிகாரம் ,வெங்காயம் தோல், ஒரு சில இயற்கை மூலப் பொருட்களை வைத்து தயார் செய்கிறோம்.
இதுவரை நாங்கள் இயற்கை மூலமாக 14 நிறங்களை கொண்டு வந்துள்ளோம். இதை வைத்து நான்கு சேலைகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ நிறத்தில் கூட சேலை தயார் செய்யப்பட்டுள்ளது, அனைத்தும் இயற்கையாக மற்றும் கைத்தறி பாரம்பரியத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு கிலோ சாயத்தில் நான்கு புடவைகளுக்கான வண்ணங்கள் மேலும் பல புதிய முயற்சியில் பல வண்ணங்கள் இளம் பெண்கள் விரும்பும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் மீண்டும் முந்தைய பாரம்பரிய இயற்கை சாயா முறைக்கு திரும்புவதால் இயற்கை சூழலும் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.