15 மாவட்டங்களுக்கு விடுமுறை:


மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15  மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


மாண்டஸ் புயல் காரணமாக நேற்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


விடாமல் பெய்த மழை:


வட தமிழகக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து இன்று நண்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி கரையேறிய நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்தது. அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ மழையும், சென்னை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் தலா 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


கடும் சேதம்:


மேலும் கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காசிமேட்டில் 150 படகுகள் சேதமாகின. 3 படகுகள் கடலில் மூழ்கின. சென்னை பூவிருந்தவல்லி, திருவேற்காடு, மாங்காடு பகுதிகளில் மரங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை துரிதகதியில் தீயணைப்புத் ட்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், மாலை வரை கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிமீ வரையிலும் வீச வாய்ப்புள்ளதாகவும், மாலைக்குப் பிறகு 85 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 3 மணிநேரம்:


அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர்,  உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ம்காலை 9.30 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 121 ஆண்டுகளில் சென்னை-புதுச்சேரி இடையே மொத்தம் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பட்சத்தில் 13ஆவது புயலாகும் என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.