மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போதி ஈ.சி.ஆர் மற்றும் கடலோர பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக போக்குவரத்து கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


புயல் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாது என தகவல் வெளியான நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவசரப் போக்குவரத்திற்கு (ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் சேவை உள்ளிட்டவை) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற போக்குவரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


இதுமட்டுமின்றி, மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ஏற்கனவே பூங்காக்கள், விளையாட்டுப்பூங்காக்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வருகிறது. சென்னையில் மழை விட்டு, விட்டு பெய்து வரும் நிலையில் மாமல்லபுரத்தில் நாளை அதிகாலை புயல் கரையை கடக்க உள்ளது.


இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், அவசர மற்றும் அத்தியாவசிய பேருந்து சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


மேலும் பல்வேறு துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: மாண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.