வாடகை வீட்டை தேடி

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளூர், பொது மக்களை விட வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நபர்கள் தங்களுடைய, வேலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடு எடுத்து தங்கி வருகின்றனர். அவ்வாறு வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பல்வேறு,  இடையூறுகளை சந்தித்து வரும் நிலையில், மாத வாடகை கொடுப்பதை விட ஒரு வீடு லீசுக்கு  எடுத்து, மொத்தமாக தொகையை கொடுத்துவிட்டால், வாடகை பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் என்பதால், அக்ரிமெண்ட் அடிப்படையில் பலர் வசித்து வருகின்றனர்.

 



 

அட ஏமாற்றுவதில்.. இது புது டெக்னிக் போல

 

இதை பயன்படுத்தி சிலர் அவர்களை ஏமாற்றவும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோரை தனியார் நிறுவனம் ஒன்று ஏமாற்றி உள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் சென்னையை அறிவுடைநம்பி என்பவர் ASOSO என்ற நிறுவனத்தை  நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, அந்த வீடுகளை லீசுக்கு விட்டு புதுவிதமான முறையில் தொழில் செய்து வந்துள்ளார் 

 

இரண்டு அக்ரிமெண்ட் இரண்டு மாங்காய்

 

இந்த நிறுவனத்தின் மூலம், மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு வாடகை தந்து விடுகிறோம், என வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு அக்ரிமென்ட் போட்டு விடுகிறார்கள். அதன் பிறகு அந்த வீட்டை 11 மாதங்களுக்கு, வீடு தேடி வரும் மற்றொரு நபருக்கு லீசுக்கு (குத்தகை) விட்டு விடுகிறார்கள்.  சரியான வாடகை மாதம் மாதம் நிறுவனம் சார்பில் வீட்டின் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள்.

 



 

ஆனால் வீட்டில் தங்கி இருப்பவர்கள் 11 மாதம் லீசுக்கு எடுத்து விடுவதால் 11 மாதம் கழித்து வீட்டை காலிசெய்து வாடிக்கையாளர்கள் கொடுத்த முன் பணத்தை திரும்ப தருவது, அல்லது மீண்டும் அந்த வீட்டை புதிய லீஸ் அக்ரிமென்ட் போடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இதன் மூலம் சொந்தமாக எந்த ஒரு வீட்டையும் கட்டாமல் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த நிறுவனம் பெருங்களத்தூர், மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் , இதே போன்ற பல வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தில் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இதுபோன்று அக்ரிமெண்ட் போடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தை நடத்திவரும் அறிவுநம்பி முறையாக நடத்தி வந்துள்ளார்.

 

வீட்டு ஓனருக்கு நோ வாடகை

 

இந்த நிலையில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீட்டிற்கு மூன்று மாதம் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் தங்கி இருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேறுங்கள், காலி செய்து கொடுங்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் 11 மாதம் பணம் திருப்பிக் கொடுக்காமல், வீட்டை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்கிறார்கள், என நிறுவனத்திற்கு சென்று கேட்டபோது உங்கள் பணம் திருப்பித் தந்து விடுவோம் என கூறி அலைக்கழித்துள்ளனர்.




 

இதனால் செய்வதறியாமல் திகைத்த பொதுமக்கள் மறைமலைநகர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு காவலர்களிடம் புகார் மனு அளித்தனர். சுமார் 150க்கும் மேற்பட்ட நபர்களிடம், இதுவரை 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நபர்கள் இதில் ஏமாந்து உள்ளதாகவும், இன்னும் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம் என பாதிக்கப்பட்ட தெரிவிக்கின்றனர்.

 

காவல் நிலையத்தில் புகார்

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளாதகவும், பல பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை ஆட்டையப்போட அறிவுடைநம்பியை கைது செய்து அவரிடமிருந்து தங்களுக்கு சேர வேண்டிய தொகையினை காவல்துறையினர் மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.



 

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையின் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தனர். தற்போது மோசடி மன்னன் தலைமறைவாக உள்ளார். பெரும்பாலும் இதில் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் அனைவரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். பல வகையில் முறைகேடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது வீட்டு வாடகையும் முறைகேடு, நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

காவல் துறை விளக்கம்

 

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது புகாரை பெற்றுக் கொண்டு உள்ளோம் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு உயர வாய்ப்புள்ளது. முறையாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இதுபோன்ற பணவிஷயத்தில் செயல்பட்டால் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கும். தற்பொழுது வீட்டைவிட்டு காலி செய்ய சொல்லும் வீட்டின் உரிமையாளர்களிடம் காவல்துறை சார்பில் பேச உள்ளோம் , தலைமறைவாக உள்ள அறிவின் நம்பியை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.