உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எப்படி மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உள்ளதோ, அதேபோல மின்சாரமும் எப்போதோ அத்தியாவசியங்களில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும், மின்வெட்டு கணிசமாக பாதிக்கிறது. 


தமிழ்நாட்டில் 2005 - 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டுதான் ஆட்சி மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்பார்கள். அப்போது சென்னையில் தினந்தோறும் 2 மணி நேர மின்வெட்டும் பிற மாவட்டங்களில் மணிக்கணக்கில் மின்வெட்டும் மக்களைப் பாடாய்ப் படுத்தின. 


மின்சார உற்பத்தி


மின்வெட்டு குறித்துத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், மின்சார உற்பத்தி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக மின்சாரத்தை, புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்கள் (non-renewable energy resources), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் (renewable energy resources) மூலம் தயாரிக்கலாம். 


இதில் புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்கள் என்பது நிலக்கரி உள்ளிட்ட மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டே இருக்க முடியாத ஆற்றலாகும். இந்த பாரம்பரிய முறை மூலம்தான் நம்முடைய பெருமளவு மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது தண்ணீர் (Hydro power plant), காற்று (Wind mill), சூரிய ஆற்றல் (Solar Power Plant) உள்ளிட்ட இயற்கை வளங்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையாகும். இந்த நவீன முறைகள் மூலம் குறைந்த அளவே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 




தமிழ்நாட்டில் நிலக்கரியில் இருந்து அனல் மின் நிலையம் (Thermal power station) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேட்டூர், எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேபோல கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 


இவை தவிர அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, காற்றாலை, சூரிய ஆற்றல் ஆகியவற்றில் இருந்தும் தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர மத்திய அரசின் தொகுப்பு மின்சார ஒதுக்கீடும் நமக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் கடுமையான மின் பற்றாக்குறையைத் தமிழகம் சந்தித்து வருகிறது. 


தொடங்கிய மின்வெட்டு


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி இரவு மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று (ஏப்.21) இரவு திருவாரூர், திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில் இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல், அரியலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. 




அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.21) இரவு நகர்ப்புறத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப்புற பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. 


மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் 


இதுபற்றி விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''மத்தியத் தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் திடீரெனத் தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.


தமிழ்நாட்டின் தினசரி மின்சாரத் தேவை 17 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 6,500 முதல் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு திடீரென்று 4,909 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. இந்த பற்றாக்குறையே அறிவிக்கப்படாத மின் தடைக்கு முக்கியக் காரணம்.


சூரிய ஒளி மின் சக்தி (சோலார்) மூலம் 3 ஆயிரத்து 33 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மேலும், தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின் தடை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது'' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 


முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலங்களில் மின்மிகை மாநிலம் என்று புகழப்பட்ட தமிழ்நாட்டில் மின்வெட்டு நிகழ்வதற்கு என்ன காரணம்?


மத்திய மின்சார ஆணையம் (CEA) 2022 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட தரவுப்படி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் இருந்து 1440 மெகா வாட், வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து 1830 மெகா வாட், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து 1050 மெகா வாட் மின்சாரம் என, அனல் மின் நிலையங்கள் மூலம் 4,320 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் தமிழகத்திடம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என ஒட்டுமொத்தமாக 7,145 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் தமிழகத்திடம் உள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் 4908 மெகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழியாக உற்பத்தி செய்ய முடியும். 




நிலக்கரி உள்ளிட்ட புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலம் நெய்வேலி, வல்லூர் உள்ளிட்ட மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் மூலமாகவும் கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்கள் மூலம் 5,890 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 8,562 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 


இதன்மூலம் மாநில, தனியார், மத்திய அரசுகளின் பங்களிப்புகளால் ஒட்டுமொத்த 35,690.69 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் நம்மிடம் உள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், நடைமுறையில் மொத்தமாகவே 12 முதல் 13 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தைத்தான் தமிழகம் தயாரிக்கிறது.


தமிழ்நாட்டின் வழக்கமான மின்தேவை நாளொன்றுக்கு சுமார் 17 ஆயிரம் மெகா வாட் ஆகும். தற்போது கடுமையான கோடைக் காலம் என்பதால் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாடு அரசு போதிய திட்டமிடலை மேற்கொள்ளாததால்தான் மின்சாரத் தடுப்பாடு ஏற்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 



முதல்வர் கடிதம்


ஒவ்வொரு மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் இதற்காக பாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்னாக மட்டுமே உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகத் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மீதமுள்ள 22 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வரத்து அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 


அதேபோல நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும் ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால் நிலக்கரி இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச்செல்ல 22 ரயில் ரேக்குகள் தேவைப்படுகின்றன. எனினும் சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே ரயில்வேயால் வழங்கப்படுகின்றன. இதனால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  


மத்திய அரசுக்கும் நிலக்கரி தட்டுப்பாடு 


மத்திய அரசுக்கும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் அனல்மின் நிலையங்கள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பருவ மழை காரணமாக நிலக்கரி சுரங்களில் தண்ணீர் புகுந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல தனியார் நிலக்கரி துறைமுகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனாலும் நிலக்கரிக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 




எனினும் தட்டுப்பாட்டால் நிலக்கரி அனுப்பப்படுவது குறைந்து, மாநில அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்சார விநியோகம் தடைபட்டது. 


108 ஆலைகளில் அபாயக் கட்டத்தில் நிலக்கரி 


மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் 21ஆம் தேதிப்படி, இந்தியாவில் மொத்தம் 173 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதில் 108 அனல் மின் நிலையங்களில், நிலக்கரி இருப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாக, அபாய கட்டத்தில் உள்ளது.


ஏப்ரல் 18 நிலவரப்படி அனல் மின் நிலையங்களில் அரசு வழங்கிய மானிய விலை நிலக்கரி, 8 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவாகச் சரிந்துள்ளது. 9 ஆலைகள் உற்பத்தியையே நிறுத்தி உள்ளன.


சில ஆலைகளில் நிலக்கரி இருப்பு குறைந்ததால், அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.  இதனால் ஆந்திரா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற 12 மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருகின்றன.


என்னதான் தீர்வு?


உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக வெளிச் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி விலையும்  கணிசமாக உயர்ந்துள்ளது. புதுப்பிக்க முடியாத நிலக்கரி உள்ளிட்ட ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதைக் குறைத்து, தண்ணீர், காற்று, சூரிய ஒளி உள்ளிட்ட தீராத, புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல் வளங்கள் மூலம் மின்சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்துவதே எதிர்காலத்துக்கான தீர்வாக இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.