விழுப்புரம் மாவட்டம் குமளம் அடுத்த வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (61) கூலி தொழிலாளி . இவருக்கு விசாலாட்சி (57) என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர் .


இதில் அவரது இளைய மகன் ராஜேஷ் (33) 2004 ஆம் ஆண்டு தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10  ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஒரு சேர வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .



பின்னர் காய்ச்சலின் தீவிரத்தால் மெல்ல மெல்ல கண் பார்வையை இழக்க ஆரம்பித்தார் .


“கெட்ட நேரம் வந்தா எல்லாம் ஒண்ணா வரும்” என்ற பழமொழிக்கு ஏற்ப , ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த வேளையில், அவரது தாய் விசாலாட்சி ஒரு விபத்தில் சிக்கி தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது . மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி , இதுவரை விவசாய கூலி வேலை சென்று கொண்டு இருந்த விசாலாட்சி படுத்த படுக்கையாக வீட்டில முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று


ஒட்டு மொத்த குடும்பமும் வறுமையில் சிக்கி தாவித்ததால், ராஜேஷ் தந்தை சின்னதுரை குடும்பத்தை கைவிட்டுவிட்டு , ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டார் .ராஜேஷின் இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி தனியாக வசித்து வரும் சூழ்நிலையில் . பிழைக்க போதிய வருமானம் இன்றி , உண்ண ஒரு வேளை உணவு கூட இன்றி வறுமையில் வாழ்கின்றனர் ராஜேஷ் மற்றும் அவரது தாய் விசாலாட்சி .



ABP செய்தி நிறுவனத்திடம் பேசிய ராஜேஷ் , ‛‛1980 களில் அரசு சார்பாக  கொடுத்த தொகுப்பு வீட்டில் நானும் எனது அம்மாவும் வசித்து வந்தோம் . ஆனால் அந்த வீடு 2008  இல் முழுவதுமாய் சிதலம் அடைந்து வாழ தகுதி அற்றதாக மாறிவிட்டது . தங்க வேறு இடம் இல்லாமல் எங்களுக்கு சொந்தமான பழைய கூரை வீட்டிற்கு குடிபுகுந்தோம் . ஆனால் அதுவும் அடுத்தடுத்த பெய்த மழை மற்றும் புயலின் காரணமாக முற்றிலும் இடிந்து விழுந்து விட்டது . தற்பொழுது எங்கள் ஊரில் இருக்கும் கோயிலில் தான் நானும் எனது தாயும் தஞ்சம் புகுந்துள்ளோம்.


மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு வாரியத்தின் மூலம் எனக்கு எடுக்க பட்ட பரிசோதனையில் , நான் 80 சதவீத கண் பார்வை இழந்துள்ளதாக சான்று அளித்ததன் பேரில் , மாதம் 1000  ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நிதி உதவி வருகிறது .



இதை கொண்டு தான் நானும் , தண்டுவடம் பாதிக்கப்பட்டு எந்த வேலைக்கு செல்ல முடியாத எனது தாயும் பிழைத்து வருகின்றோம். மேலும் இந்த ஆயிரம் ருபாய் நிதி எனது தாயின் மருத்துவ செலவு உள்ளிட்ட எங்களது அன்றாட செலவுக்கு சரி ஆக இருப்பதால் மீதி இருக்கும் பணம் எங்கள் ஒரு வேலை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை . மாதத்தின் பாதி  நாட்கள் நானும் எனது தாயும் பசி பட்டினியின் கோர தாண்டவத்தால் சூழ்ந்து உள்ளோம் . அரசு சார்பில் என் தகுதிக்கு ஏற்றார் போல் ஒரு அரசு வேலை அளித்தால் நானும் எனது தாயும் மூன்று வேளை உணவுக்கு எந்த தட்டுப்படும் இன்றி எங்களது கடைசி காலத்தை கழிப்போம்,’ என்றார். 


’கண் பார்வை இழந்தாலும் எண்களை மிக துல்லியமாக ஞாபகத்தில் வைத்து கொள்ள கூடிய திறன் உள்ளதாக கூறும் ராஜேஷ், தனக்கு அரசு அலுவலங்களில் தொலைபேசி ஆபரேட்டர் வேலை ஒன்று கொடுத்தால் கடைசி வரை இந்த அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன்,’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் .



மேலும் தங்களது தொகுப்பு வீடு மற்றும் குடிசை வீடு இரண்டும் வசிக்க தகுதி இன்றி இருப்பதால் , அரசு சார்பில் தங்களது வீட்டினை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார் ராஜேஷ் .