அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவினரை ஒன்றிணைக்கும் வகையில் கட்சித் தொண்டர்களைச் சந்திக்கும் பயணத்தை சசிகலா மேற்கொள்ள உள்ளார். 


சசிகலாவின் புரட்சிப்பயணம்


இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் சசிகலா புரட்சிப்பயணத்தைத் தொடங்குகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புரட்சிப்பயணத்தை வரும் ஜூன் 26, மதியம் 12:30 மணிக்கு தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் அவர் திருத்தணி, குண்டலூர் பயணித்து பின் கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுப்பம், R.K.பேட்டை என சென்று அங்குள்ள கழகத் தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து ஓபிஎஸ்


முன்னதாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மனம் திறந்து பேசினார்.  கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பதை எதிர்த்த நீங்கள் இன்று அதற்கு முரணாக இருக்கிறீர்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், “அப்போது ஆட்சி கவிழும் நிலை இருந்தது.


நான் எப்போதும் சசிகலாவை கட்சியில் இணைப்பது பற்றி ஏதும் பேசியதில்லை. இந்த சமாச்சாரத்தில் கட்சியின் தலைமைக் கழகம் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பதாகதான் நான் கூறியிருகிறேன். சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து நான் சொன்ன கருத்து ஒன்றும் தேசத்துரோகமானது இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.


அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஜூன்.23) நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இந்நிலையில், வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்