அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, பள்ளிக் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்துவது எப்படி? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும் உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:


''தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறையில் இருந்து வெளியிடப்படும் அவ்வப்போதைய அறிவிப்புகள் சர்ச்சை ஆகின்றன. சமீபத்தில் மழலையர் பள்ளிகளில் சேர்க்கையை நிறுத்துவதென்ற முடிவை அரசு எடுத்தது. ஆனால் அது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பாதிக்கும் என்று விமர்சனங்களை எழுந்த பிறகு, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.


இப்போது அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க அதிமுக அரசு கொடுத்திருந்த அனுமதியை அரசு நீட்டித்தது. இந்த முடிவின் மீது விமர்சனம் எழுந்ததும் உடனடியாக அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது.


விமர்சனங்களுக்கு செவிசாய்த்து, முடிவுகளை மாற்றியமைப்பது வரவேற்புக்குரிய நடவடிக்கை. கற்றல், கற்பித்தல் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தச் செய்வதே புதிய கல்விக் கொள்கை காட்டும் திசை வழியாகும்.


ஆனால், தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை முன்னெடுக்க மாட்டோம் என தமிழக அரசு தெளிவாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கென தனியாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கிட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழுவின் அறிக்கையை வேகமாகப் பெற்று, அதன்படி பள்ளிக் கல்வித்துறையைச் செயல்படுத்துவது அவசியமாகும். அதுவே தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்திடும்''.


இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 




அகஸ்தியா பின்னணி என்ன?


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள்,உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


அமைச்சர் தொடக்கம்:


STEM திட்டத்தை ,IIT மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். STEM - Science, technology, engineering,maths ஆகிய பாடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதாகும்.


இதற்கிடையே 2022-23ஆம் ஆண்டுகளில்  STEM வகுப்புகள் நடத்த அகஸ்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண