கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று காற்று தரக் குறியீடு 382 புள்ளிகளாக பதிவானது. தலைநகரில் நாள்தோறும் சராசரியாக 400 புள்ளிகள் பதிவாகி வருகிறது. இது மக்களின் உடல் நலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி மனிதர்கள் வாழ மிகவும் ஆபத்தான பகுதி என்று பல அறிவியல் நிறுவனங்கள் அறிக்கை கொடுக்க, காற்று மாசை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளை மூடி, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுவதுமே விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் முக்கியமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இப்போதில்லருந்தே கவனமாக இருந்தால் டெல்லியின் நிலையை அடையாமல் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறிப்பாக தென் சென்னையில் காற்றின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விழிப்புப்பணி ஆய்வு கூட்டம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் விமானம், இரயில், பஸ், கார் மூலமாக வந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களின் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுக்கு ஈடாக மரக்கன்றுகளை நட முடிவு செய்திருந்தனர். 300 மரக்கன்றுகள் நட்டால் அதனை சமன் செய்ய முடியும் என முடிவு செய்த இந்தியன் ஆயில் நிர்வாகத்தினர் சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளைக்கொண்டு 300 மரக்கன்றுகளை நட்டு சிறு குறுங்காடு ஒன்றினை உருவாக்கினர். மூன்று அடிக்கு ஒரு மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டுள்ளது. விழாவில் பேசிய இந்தியன் ஆயில் துணை பொது மேலாளர் வீ.குமார் இது போன்று கான்ஃபெரன்ஸ் மாநாடுகள் நடத்தப்படும்போது, அங்கு நிறைய வாகனங்கள் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறைய ஓர் இடத்திற்கு வர வேண்டிய காரணம் இருப்பதால், அந்த மாநாட்டை ஒருங்கிணைப்பவர்கள், தலைமை ஏற்று நடத்துபவர்கள் அவரவர் ஏற்படுத்தும், மாசுக்களை சமன் செய்ய இது போன்று மரக்கன்றுகள் நடலாம், அது எதிர்காலத்திற்கு நன்மை விளைவிக்கும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்த மரம் நடும் விழாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை துணை பொது மேலாளர் வீ.குமார் தலைமை வகித்தார். மரம் நடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வல அமைப்புகளின் ஆதரவை இந்தியன் ஆயில் நிறுவனம் நாடியிருந்தது. எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் எஸ்.செந்தூர் பாரி, ராணி மேரி கல்லூரி முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி, கிரீன் டீம் தலைவர் மோகனசுந்தரம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் ஜெயதேவன், கே.சைலேந்திரா, ஆனந்தகுமார் சிங், எஸ்.கே.ராலி, ஹேமாராவ் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஈஸ்வரி, வனஜா, முருகேஸ்வரி, ஷெரீன், மேரி ரீனா, கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், பேராசிரியர்கள் மாலதி, கற்பகம், சமூக ஆர்வலர்கள் கண்ணதாசன், ஜோதி, ராஜ்குமார்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி முதல்வர் வரலட்சுமி அனந்தகுமார் வரவேற்றார். விதை விதைப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா நன்றியுரை கூறினார்.