மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அதிமுக பாணியில், கமல்ஹாசன் பூரண குணமடைய வேண்டி அவரது கட்சியினர் ஆங்காங்கே சிறப்பு பூஜைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.



 

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துவருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று திரும்பியவருக்கு லேசான இருமல் இருக்க, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கமல். மேலும், மக்களுக்கும் தொற்று அகலவில்லை. எச்சரிக்கையாக இருங்கள் என தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.

 



கமல்ஹாசன் தன்னை எப்போதுமே நாத்திகவாதியாகவே பொதுவெளியில் காட்டிக் கொள்வது வழக்கம். சுந்தர் . சி இயக்கத்தில் அவர் நடித்த அன்பேசிவம் படத்திலும் அன்பையே பிரதானமாக சிவனாகப் பேசுவார் கமல்ஹாசன். எந்த ஆன்மிக அடையாளத்துக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளாத மனிதராகவே வலம்வருபவர் கமல்ஹாசன். இப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் அதிமுக பாணியில் அவருக்காக பிரார்த்தனை செய்து சிறப்புப் பூஜைகள் செய்துவருகிறார்கள் அவரது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.

 



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் விரைவில் பூரண நலம் பெற வேண்டி, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வழக்கறுதீஸ்வரர் கோவிலில் மாநில செயலாளர் எஸ்.கே.பி கோபிநாத் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், வினாயகருக்கு தோப்பு கரணம் போட்டு தீவிர பிராத்தனையில் ஈடுபட்டனர். பின்னர் கமலஹாசன் பூரண நலம் பெற வேண்டி  கோவிலில் உள்ள மூலவர் சிவ பெருமானுக்கு சிறப்பு பூஜையும் அபிசேக ஆராதனைகளும்  நடைபெற்றது.