காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 


சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரித்தது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900 திற்கும் மேற்பட்ட சிஐடிய தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




முதலமைச்சர் குழுவுடன் பேச்சுவார்த்தை


போராட்டத்தை கைவிட வேண்டும் என ஐந்திற்கும் மேற்பட்ட முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தோல்வியில் முடிந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு குறு தொழில்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமை குழு அமைத்தது.


அமைச்சர்கள் குழு நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில், தொழிற்சங்கத்தினர், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களின் கூட்டாக சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்ததாவது: நிர்வாகம் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஐந்து பேருந்துகள் தான் ஏசி பேருந்துகளாக இருந்தது. இப்போது கூடுதலாக 108 ஏசி பேருந்துகள் இயங்குவதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளது.


வேலைக்குச் செல்ல வேண்டும் 


தொழிலாளர்கள் யாராவது உயிரிழந்தால் உடனடியாக ஒரு லட்சம் தருவோம் என கூறி இருக்கிறார்கள். கூடுதலாக சம்பளம் இந்த மாதத்தில் 5000 ரூபாய் (இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகை - அக்டோபர் முதல் மார்ச் வரை) உயர்த்த தருவதாக கூறியிருக்கிறார்கள். இதுபோன்ற 14 கோரிக்கைகளை நிர்வாகம் அரசிடம் ஒத்துக் கொண்டு சென்று இருக்கிறது. ஒரு தரப்பினர்தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் வேலைக்கு சென்று இருக்கிறார்கள். 




இரண்டு தரப்பினரிடம் நாங்கள் பேசியிருக்கிறோம். முடிந்த அளவு பிரச்சினையை தீர்ந்துவிடும் என நினைக்கிறோம். சில குறைபாடுகள் இருந்தாலும், சரி செய்து தருவதாக நிர்வாக தரப்பில் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் , முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று நாளையிலிருந்து வேலைக்கு செல்ல வேண்டுமென அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசு தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறது . தொழிலாளர்களும் பாதிக்கப்படக்கூடாது, நிர்வாகமும் பாதிக்கப்படக்கூடாது. 


சங்கத்திற்கு மறுப்பு


நமது அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து, வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வந்து ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கிறோம். ஓரளவிற்கு இந்த பிரச்சனையில் தொழிலாளர்கள் சுமூகமாக தான் போயிருக்கிறார்கள். சிஐடியு சார்பில் எங்களிடம் தான் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கைக்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.




இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அது பற்றி இப்போது பேச முடியாது. நீதிமன்றத்தில் என்ன உத்தரவு வருகிறது அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகம் எங்களிடம் தான் பெரும்பான்மையான ஊழியர்கள் இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள், சிஐடியு சார்பில் எங்களிடம் தான் பெரும்பான்மையான ஊழியர்கள் இருப்பதாக கூறுகிறார்கள் அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என தெரிவித்தார்.


சிஐடியு சொல்வதென்ன ?


இது தொடர்பாக சாம்சங் இந்தியா தொழிலாளர்கள்க சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார் கூறுகையில், சாம்சங் போராட்டம் தொடர்கிறது அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொலைக்காட்சியில் வரக்கூடிய உடன்பாடு ஏற்பட்டது என்கிற செய்தி உண்மைக்கு மாறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல திசை திருப்பும் இந்த நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார். 


இன்று போராட்டம் நடைபெறுமா ?


ஏற்கனவே சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டம் தொடரும் என அறிவித்திருப்பதால் இன்றும், வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.