மாணவர் சலுகை பயண அட்டை விற்பனை எதிர்வரும் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் மீண்டு வரும் நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்து கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


சென்னையில் பயிலும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கட்டண பயண அட்டை மாநகர போக்குவரத்துக் கழகம் விநியோகித்து வருகின்றது. இந்த சலுகை பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி முதல் 13ஆம் தேதி வரை போக்குவரத்து டிப்போக்களில் வழங்கப்படும். இதில் மாணவர்கள் 50% சலுகை அடிப்படையில் பயண அட்டையைப் பெற்று வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்தமாகவே தனது இயல்பு நிலையினை இழந்தது. புயல் காரணமாக கடந்த வாரம் முழுவதும் இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 


நான்கு மாவட்டங்களும் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மாணவர்களின் நலன் கருதி, வழக்கமாக சலுகை பயண அட்டை விநியோகிக்கும் தேதியில் இருந்து அதாவது 13ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதிக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.