பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விழுப்புரத்தில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை துறைமுகத்திற்கு இரும்பு மூலக்கூறுகள், உலோக தகடுகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, 38 பெட்டிகளுடன் விழுப்புரத்திலிருந்து கிளம்பியது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 10:30 மணி அளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து அடைந்தது.




செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொழுது பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. சுமார் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.


இரும்பு பொருட்களை ஏற்றி வந்ததால் அதிக பாரத்துடன் இருந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் பல்வேறு இடங்களில் தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. தண்டவாளம் விரிசல் அடைந்தும் காணப்படுகிறது. சரக்கு ரயில் மட்டும் தடம் புரண்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 




மேலும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு ரயில் மீட்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. பிரதான ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளதால் செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக இன்று காலை மின்சார ரயில்கள் நேர தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் முடிய இன்று மாலை வரை ஆகலாம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்சார ரயில்கள் வழக்கம் போல் செயல்படும். மற்ற இருப்பு பாதைகள் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால், ரயில்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என தெற்கு ரயில்வே தகவல் வெளியாகியுள்ளது.