RSS Campaign: தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிர மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
விஜயதசமி, சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் அனுமதி நடத்த முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நவம்பவர் 6-ஆம் தேதி அனுமதி
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் காவல்துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக நவம்பர் 4-ஆம் தேதி அதாவது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருந்தார்.
மேலும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற எந்த இடங்களில் வழங்கவில்லை என ஆர்எஸ்எஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இன்று விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கன்னியாகுமரி, பல்லடம் தவிர மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம்.
6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும் அசம்பாவிதங்கள் நடந்தால் ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அறிவுறுத்தி உள்ளார்.