தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான், தனது முக நூல் பக்கத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை இருக்கும் என பதிவிட்டிருந்தார்.



அதில் வெள்ளிக்கிழமை (இன்று) தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். வடசென்னையில் மாலையில் மழை பெய்யும், ஆனால்  எல்லா மேகங்களும் 30 நிமிடங்களில் 60 மிமீ வரை கொட்டாது. எனவே எந்த சிறு  மழை வந்தாலும் அவை அனைத்தும் அச்சுறுத்தலாக இருக்காது. சென்னைக்கு இன்று வெயில் வர அதிக வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


டெல்டா  மாவட்டங்களாகிய நாகை, திருவாரூர், மதுரை, ராமனாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை என தென் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.


இன்று காலை சென்னைக்கு வெயில் வரும் என்பதை நாசூக்காக பதிவிட்டிருந்தார். அதாவது கடலில் இருந்து உட்புறம் வரை உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து காய வைத்த துணியை   இன்னும் 60 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம் என பதிவிட்டிருந்தார். அதாவது இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு வெயில் இருக்கும் என்பதை கூறியிருந்தார். (காயா போட்ட லுங்கி, பனியன், பட்டாப்பட்டி போன்றவை இன்னும் கொஞ்ச நேரம் காயட்டும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது)


வானிலை ஆய்வு மையம் பொறுத்தவரை,


05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


07.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.